
தொலைதூரப் பயணத்திற்கு பெரும்பாலும் இரயில் போக்குவரத்தையே பயணிகள் விரும்புவர். ஆனால் இரயிலில் பயணிக்க குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் பெரும்பாலான பயணிகள் பேருந்து போக்குவரத்தைத் தேடி வருகிறார்கள். அரசுப் பேருந்துகளில் இடம் கிடைத்து விட்டால் சரி; இல்லையெனில் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில் தான் பயணம் செய்தாக வேண்டும். இதனைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இலாபம் பார்க்கின்றனர்.
சாதாரண நாட்களைக் காட்டிலும் வார விடுமுறை, தொடர் விடுமுறை, தீபாவளி மற்றும் பொங்கல் விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கும். சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து வருவதால், இதனைத் தடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என பலமுறை தமிழக அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும் கூட அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டண விலையை ஆம்னி பேருந்துகள் பின்பற்றவில்லை. இந்நிலையில் இனி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடிக்க சிறப்புக் குழுவை நியமித்துள்ளது தமிழக அரசு. இது பேருந்து பயணிகள் பலருக்கும் நற்செய்தியாக அமைந்துள்ளது. இன்று மிலாடிநபி மற்றும் ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து வார விடுமுறை வருவதால், பலரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இரயில் மற்றும் அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் பலரும் ஆம்னி பேருந்துகளை நாடியுள்ள நிலையில், அங்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிரிச்சியை அளித்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இது வாடிக்கையாக இருந்தாலும், இம்முறை தமிழக அரசு இதனைத் தடுக்க தீவிரமான நடைமுறையில் இறங்கியுள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களைக் கொண்டு சிறப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு முழுக்க அமைத்துள்ளது அரசு.
இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் கூறுகையில், “தொடர் விடுமுறையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடிக்க சிறப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளோம். இந்த சிறப்புக் குழுவில் உள்ள அதிகாரிகள் அனைத்து ஆம்னி பேருந்துகளையும் சோதனை செய்வார்கள். சிறப்புக் குழுவின் மூலம் அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சோதனையின் அடிப்படையில் வரி வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
தமிழகப் போக்குவரத்து துறையின் இந்த நடவடிக்கை பேருந்து பயணிகளுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது. இருப்பினும் இனி வரும் வார விடுமுறைகளிலும் இதேபோல் சிறப்புக் குழு அமைக்கப்படுமா என்பது பற்றி அரசு தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.