இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் ஏற்ற போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இன்று வரை இருக்கிறது. பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு திட்டங்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. இந்நிலையில் பயணிகளுக்கு தனித்தனி அறைகள் வழங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வே துறை ஆண்டுக்கு ரூ.2,600 கோடி லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் அசோசியேஷன் சார்பில், 60-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்றது.
இந்தியாவில் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் ஐசிஎப் தொழிற்சாலை, சென்னை பெரம்பூரில் இயங்கி வருகிறது. ரயில் பெட்டிகள் உருவாக்கத்தில் என்னென்ன மேம்பாடுகளை செய்ய வேண்டும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது மற்றும் ரயில்வேயில் ஆண்டு வருமானத்தை உயர்த்துவது உட்பட பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி சென்னையில் நடந்த மாநாட்டில் ஆலோசனை நடைபெற்றது.
இதில் ரயில் பெட்டிகள் உருவாக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பமான லேசர் வெல்டிங்கை பயன்படுத்தினால், உற்பத்தி செலவு குறைவதோடு லாபத்தை ஈட்ட முடியும் என கலந்தாலோசிக்கப்பட்டது.
தற்போது ரயில் பெட்டிகள் உருவாக்கத்தில் ஏற்படும் காலதாமதம் மற்றும் ரயில் பெட்டிகளின் எடையைக் குறைத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண லேசர் வெல்டிங் முறை நிச்சயமாக உதவும் என ஐஆர்டிஎஸ்ஏ பரிந்துரைத்தது. ரயில் பெட்டிகளில் நெளிவு தன்மை கொண்ட பக்க சுவர்களை பயன்படுத்தினால் ஒவ்வொரு பெட்டியிலும் கிட்டத்தட்ட 500 கிலோ வரை எடையை குறைக்கலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதன் மூலம் 22 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் எடையை மொத்தமாக 11 டன் வரை குறைக்க முடியும். எடை குறைப்பு காரணமாக கூடுமானவரை எரிபொருளை சேமிக்க முடியும். இது தவிர ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான இரும்பு செலவை குறைக்க முடியும்.
லேசர் வெல்டிங் முறையை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் உற்பத்தி நேரத்தை குறைப்பதோடு, ரயில் பெட்டிகளின் தரமும் மேம்படும்.
ரயில் பயணிகளுக்கு சரியான தனிப்பட்ட அறைகளை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் ரயில்வே நிர்வாகத்தின் வருவாயை உயர்த்த முடியும். இதன்படி 2 ஏசி மற்றும் 3 ஏசி பெட்டிகளில் 25% மற்றும் இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் 10% என சிறிய அளவிலான தனிப்பட்ட அறைகளை உருவாக்கினால், ரயில்வே நிர்வாகத்திற்கு ஓராண்டுக்கு மட்டும் ரூ.2,600 கோடி லாபம் கிடைக்கும்.
தனிப்பட்ட அறைகளை உருவாக்குவதன் மூலம் பயணிகளுக்கு ஒரு புதுவிதமான தனியுரிமை கொண்ட பயணத்தை வழங்க முடியும். இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், இன்னும் ஓரிரு வருடங்களில் ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு தனிப்பட்ட அறைகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.