
சென்னை மக்களுக்கு மெட்ரோ இரயில் போக்குவரத்து, தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. தொடக்க காலத்தில் டிக்கெட் விலை அதிகம் என கருதப்பட்டாலும், இப்போது மெட்ரோ இரயிலில் பயணித்தால் நேரத்தை மிச்சபப்டுததலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயிலை இயக்க சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் (CMRL) முடிவெடுத்து அதற்கான வேலைகளைத் தொடங்கியது. ஏற்கனவே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்களை வாங்கிய நிலையில், தற்போது தடுப்புகளுடன் கூடிய முதல் மெட்ரோ இரயிலை வாங்கியுள்ளது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்.
மெட்ரோ இரயில் பயணத்தை சிறப்பானதாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஓட்டுநரே இல்லாத இரயில்களை வாங்கி புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது மெட்ரோ இரயில் நிர்வாகம். இதற்காக கடந்த ஆண்டில் 17 இரயில்களை வாங்கியது மெட்ரோ நிர்வாகம்.
இந்த இரயில்களில் ஓட்டுநர் பெட்டியே இருக்காது என்பதால், பயணிகள் இரயிலின் முன் மற்றும் பின் பகுதியில் பயணித்துக் கொண்டே சென்னை நகரத்தின் அழகை ரசிக்கலாம் எனக் கருதப்பட்டது. இது பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, இம்மாதிரியான இரயிலால் பயணிகளுக்கு பாதுகாப்பு இருக்காது எனக் கருதி, ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டுவர சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.
இதன்படி, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்களில் ஓட்டுநர் பெட்டியை அமைத்து, பயணிகள் பெட்டிக்கும் ஓட்டுநர் பெட்டிக்கும் இடையில் தடுப்புகளை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. மேலும் தொடக்கத்தில் இந்த இரயிலை ஓட்டுநர் தான் இயக்குவார் என்றும், போகப்போக ஓட்டுநர் இல்லாத இரயிலாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் 118.9 கிலோமீட்டருக்கு இரண்டாம் கட்டப் பாதையை அமைத்து வருகிறது. இந்தப் பாதையில் ஓட்டுநர் இல்லாத இரயில்களை இயக்குவதே இதன் திட்டம். இதற்காகவே தற்போது தடுப்புகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்கள் சென்னைக்கு வந்துள்ளன.
அடுத்த கட்டமாக இன்னும் சில இரயில்கள் சென்னைக்கு வரவுள்ளன. தடுப்புகள் இருப்பதால் பயணிகளால் ஓட்டுநர் பெட்டிக்குள் செல்ல முடியாது. இது பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போது இந்தத் திட்டத்தில பூந்தமல்லி முதல் போரூர் வரை ஒரு சிறிய பகுதி வரை மட்டுமே சேவையைத் தொடங்க முடிவு செயய்ப்பட்டுள்ளது.
இந்தச் சேவைக்கு குறைந்தது 8 இரயில்களாவது தேவை என்பதால், இன்னும் சில தடுப்புகளுடன் கூடிய மெட்ரோ இரயில்கள் சென்னைக்கு வந்த பிறகு விரைவில் சேவையைத் தொடங்கவுள்ளது மெட்ரோ நிர்வாகம்.