
நாடு முழுக்க நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். இவர்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருவதற்கு உதவும் வகையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தெற்கு ரயில்வே.
இதன்படி நாளை அக்டோபர் 22ஆம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூரை வந்தடையும். ரயிலின் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெடடிகளாக இருப்பதால், பயணம் செய்யும் பயணிகளுக்கு சிரமம் இருக்காது என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவில்லாத சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்குச் சென்ற பொதுமக்கள், சிரமமின்றி மீண்டும் சென்னைக்குத் திரும்ப முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் நாளை இயக்கப்பட உள்ளது. இதன்படி அக்டோபர் 22 ஆம் தேதி இரவு 11:55 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 10:55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
அதேபோல் எதிர் மார்ககத்தில் அக்டோபர் 23 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 12:30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், அடுத்த நாள் நள்ளிரவு 12:05 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்குச் சென்றவர்கள் இந்த சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளுக்கு உதவும் வகையில் தெற்கு ரயில்வேயால் பல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், சில ரயில்களில் பயணிகளின் வரத்து குறைந்ததால், அவை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி சென்னை சென்ட்ரல் - கோட்டயம், கோட்டயம் - சென்ட்ரல், நெல்லை - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - நெல்லை, நாகர்கோவில் - சென்ட்ரல் மற்றும் சென்ட்ரல் - நாகர்கோவில் உள்ளிட்ட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.