
நாட்டில் பெரும்பாலான மக்கள் இரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புவர். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணம் தான் இரயில் போக்குவரத்தின் சிறப்பு. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தரவும் இந்தியன் இரயில்வே பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க கொண்டு வரப்பட்டது தான் வந்தே பாரத் இரயில்கள்.
180 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் இரயில்கள் பயணிப்பதால் 2 முதல் 4 மணி நேரம் வரை பயண நேரம் குறைந்தது. இதனால் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் இரயில்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வந்தே பாரத் இரயில்களில் பயணிகளுக்கான வசதியை மேம்படுத்தும் வகையில், தற்போது தூங்கும் வசதி கொண்ட இரயில்களை களமிறக்க இந்தியன் இரயில்வே மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
2 தூங்கும் வசதி கொண்ட பாரத் இரயில்கள் அடுத்த மாதம் முடிவதற்குள் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என இரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஐசிஎப் இரயில் பெட்டித் தொழிற்சாலையில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் இரயில்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. வந்தே பாரத் இரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், இன்னும் கூடுதலாக வந்தே பாரத் இரயில்களை உருவாக்கி வருகிறது ஐசிஎப். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் 2 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் இரயில்களும் அடங்கும்.
இரவு நேரங்களில் பயணிகள் தூங்கிக் கொண்டே பயணம் செய்யும் வகையில், இந்த இரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இரயில் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில் நாட்டின் முதல் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் இரயில் தயாரிக்கப்பட்டது. பிறகு இந்த இரயில் சென்னையில் உள்ள ஐசிஎப் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரயிலின் உள்பகுதியில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் 16 ஏசி பெட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு கட்ட சோதனைகளை நிறைவு செய்து, வந்தே பாரத் இரயிலை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்தது ஐசிஎப். 10 மாதங்கள் கடந்த நிலையில் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் இரயில் இன்னும் பயன்பாட்டுக்கு வராதது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நவம்பர் மாத இறுதிக்குள் இந்த இரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இதுகுறித்து இரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “இரயில் பயணிகளைக் கவரும் வகையில் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் இரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த இரயில், பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.
நீண்ட தொலைவு செல்லும் தடங்களில் இந்த இரயில் இயக்கப்பட உள்ளது. முதல் இரயில் தயாராக உள்ள நிலையில், இரண்டாவது இரயில அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் வந்து விடும். ஆகையால் இரண்டு இரயில்களும் நவம்பர் மாத இறுதிக்குள் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தனர்.