
பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை இரயில்வே துறை வழங்கி வருகிறது. இரயில் பயண நேரம் அதிகரிப்பதைத் தவிர்க்க வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை அறிமுகப்படுத்தியது இந்தியன் இரயில்வே. இந்த இரயில்களின் மூலம் பயணிகளுக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் மிச்சமாகிறது.
இந்நிலையில் வந்தே பாரத் இரயில் சேவையை நாட்டின் முக்கியமான இடங்களுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி சென்னையில் இருந்து இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் இரயில் சேவையைத் துவக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், எப்போது இரயில் சேவை தொடங்கும் என பயணிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இராமநாதபுரம் முதல் இராமேஸ்வரம் வரையிலான இரயில் பாதை மின்மயமாக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்திருந்தது. இதன்படி தற்போது இந்தப் பாதை மின்மயமாக்கம் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இந்தப் பாதையில் மின்சார இரயில்கள் விரைவில் இயக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் சென்னை முதல் இராமேஸ்வரம் வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என பயணிகள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.
தற்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் வரையுள்ள 670கி.மீ. தொலைவைக் கடக்க 11.30 மணி நேரம் ஆகிறது. வந்தே பாரத் இரயில் சேவை நடைமுறைக்கு வந்து விட்டால், இந்தப் பயணம் 9 மணி நேரமாக குறைந்து விடும். மணிக்கு 160கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் இரயில் இயங்கும் என்பதால், தான் இரயில் பயணிகள் சென்னையில் இருந்து இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் இரயில் சேவை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தெற்கு இரயில்வேயும் இதற்கு சம்மதம் தெரவித்த நிலையில், விரைவில் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தாம்பரத்தில் இருந்து தான் இராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்படும் எனற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இருப்பினும் இதற்கான டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நடப்பாண்டில் தான் பாம்பன் பாலம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது. இதனால் இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்படுவதில் பிரச்சினை இருக்காது. வந்தே பாரத் இரயில் தாம்பரத்தில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:30 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும். அதேபோல் இராமேஸ்வரத்தில் பிற்பகல் 3:30 மணிக்குப் புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு தாம்பரத்தை அடையும் எனக் கூறப்படுகிறது.
செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, மானாமதுரை மற்றும் மண்டபம் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை வருவதற்குள் இந்த இரயில் சேவை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.