செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது. தொழில்நுட்ப உலகின் பல முன்னணி நிறுவனங்களான கூகுள், பெர்ப்ளெக்ஸிட்டி மற்றும் சாட் ஜிபிடி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஏஐ தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகின்றன. அதற்கேற்ப இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் ஏஐ நுட்பத்தை அதிகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒரு சிலர் ஏஐ தொழில்நுட்பத்தை தனது நண்பராகவே நினைத்து, தினந்தோறும் பேசி வருகின்றனர்.
அனைத்து துறைகளிலும் தவிர்க்க முடியாத அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் தற்போது பன்மடங்கு முன்னேறி விட்டது. இந்நிலையில் சில முன்னணி நிறுவனங்கள் தங்களது ஏஐ தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக பயன்படுத்த அனுமதித்துள்ளனர். இந்தப் போட்டியை சமாளிக்க கூகுள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்கியுள்ளது.
இதன்படி ஜியோ சிம் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்தினால், கூகுள் ஏஐ தொழில்நுட்பத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெர்ப்ளெக்ஸிட்டி மற்றும் சாட் ஜிபிடி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது புதிய பயனாளர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை இலவசமாக பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஓராண்டுக்கு செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலியை சாட் ஜிபிடியின் ப்ரோ பதிவில் புதிய வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்நிலையில் ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி சூழ்நிலையை சமாளிக்க, கூகுள் நிறுவனமும் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி 5G இணைய சேவையை பயன்படுத்தி வரும் ஜியோ வாடிக்கையாளர்கள், கூகுளின் ‘ஜெமினி ப்ரோ ஏஐ’ பதிப்பை ஒன்றரை ஆண்டு காலத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏஐ தொழில்நுட்பத்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், கூகுளின் இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கூகுளின் தொழில்நுட்பம் ஜியோ சிம்மில் இலவசமாக கிடைப்பதால், ஜியோ நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஜியோ சிம் பயனாளர்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஜியோ 5ஜி பயனர்களுக்கு, 35,100 ரூபாய் மதிப்பிலான கூகுள் ஏ.ஐ., ப்ரோ உள்ளிட்ட சில வசதிகள், 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 18 - 25 வயதுடைய ஜியோ அன்லிமிடெட் 5ஜி திட்ட சந்தாதாரர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
ரூ.35,100 மதிப்புள்ள இந்த சேவையில் அன்லிமிடெட் AI சாட், 2TB கிளவுட் ஸ்டோரேஜ், வீடியோ உருவாக்கம் செய்யும் Veo 3.1, மற்றும் புகைப்படங்களை உருவாக்கும் Nano Banana தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.
ரூ.349 திட்டத்தில் 5G இணைப்பைப் பெற்றிருக்கும் பயனர்கள் இதனை 18 மாதங்கள் வரை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
ஏஐ தொழில்நுட்ப வசதி இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக அதிக அளவில் பயன்படுத்தி அதில் இளைஞர்கள் யாரும் அதில் மூழ்க வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் கடந்த சில நாட்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் தற்கொலை தொடர்பான கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. ஏஐ தொழில்நுட்பத்தை நல்லவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தினால், அதில் கிடைக்கும் பலன்கள் ஏராளம் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.