

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஒழுங்குமுறை மற்றும் பயனர் தனியுரிமை குறித்து விவாதிக்க, கூகுள், மெட்டா மற்றும் எக்ஸ் (X) நிறுவனங்களின் உயர் பிரதிநிதிகள் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். இதனை நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதில் சமூக ஊடகங்கள், டிஜிட்டல் கட்டுப்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ள முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
பிரீமியம் அல்லது கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கான வேறுபட்ட சேவைகள், அனைத்து இணையப் பயனர்களுக்கும் பாரபட்சமின்றி சமமான அணுகல் வழங்கப்பட வேண்டும் என்ற நிகர நடுநிலைமைக் கொள்கையை சிதைத்து விடும் என்ற கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கிய கூட்டத்திற்கு கூகுள், மெட்டா, எக்ஸ் மற்றும் ஸ்னாப்சாட் ஆகிய சமூக வலைதளங்கள் அழைக்கப்பட்டுள்ளன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(MeitY) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் குழுவின் முன்பு விளக்கம் அளிக்க உள்ளனர். சமூக ஊடகங்களும் டிஜிட்டல் தளங்களும், அவற்றின் ஒழுங்குமுறை விதிகள் மற்றும் நிகர நடுநிலைமை ஆகியவைப் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பிரதம மந்திரியின் முகநூல் காணொளி ஒன்று தற்காலிகமாக நீக்கப்பட்டது போன்ற தொழில்நுட்ப நிகழ்வுகளும், டிஜிட்டல் தளங்களின் கட்டணச் சேவைகள் தொடர்பான நுகர்வோர் உரிமைகளும் இக்கூட்டத்திற்கு முக்கிய காரணமாகும்.
செவ்வாய்க்கிழமை அன்று மேட்டா தளத்தில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுத் தாள் கசிவுகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசிய முகநூல் காணொளி அந்த தளத்திலிருந்து சிறிது நேரத்திற்கு நீக்கப்பட்டு பின்பு மீண்டும் சேர்க்கப்பட்டது. அதற்கு மெட்டா செய்தித் தொடர்பாளர், அந்த உள்ளடக்கம் தவறுதலாக நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியதுடன், தொழில்நுட்பக் கோளாறே இந்த நீக்கத்திற்கான காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்ததாகக் கூறி மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டது. இந்தச் சூழலில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நேரடி உரையானது நீட் - யுஜி 2026 தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான 36 நாள் போராட்டத்தின் பொழுது, ஜூலை 23 அன்று வெளியிடப்பட்டது. இந்த காணொளி ஜென் இசட் (Z) தலைமுறையினருக்கு ஆற்றிய நேரடி உரையாகும். இதில் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான சட்ட கட்டமைப்பை அரசு வலுப்படுத்தும் என்றும், சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைத்து புதிய சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் மாணவர்களுக்கு பிரதமர் உறுதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசு பொதுத்தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்கு திருத்த மசோதா 2026-யை அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, உயர்த்தப்பட்ட பண அபராதங்கள் மற்றும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதை இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
ஜூலை 25 அன்று மாணவர் போராட்டம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. அத்துடன் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவும், காவல்துறையின் மிரட்டல்களை தடுப்பதற்கும், வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதற்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு ஒரு புரிந்துணர்வை எட்டியது.