கொசுவை கொல்ல கொசுவே ஆயுதம்..! அமெரிக்காவில் 3 கோடி கொசுக்களை பறக்கவிடும் கூகுள்..!

கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பதிலாக, 32 மில்லியன் (3.2 கோடி) சிறப்பு வகை கொசுக்களை இயற்கையில் வெளியிடக் கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Google wants to release millions of mosquitoes
Google wants to release millions of mosquitoesAI Image
Updated on

குளிர்காலம் என்றில்லை இப்போது கோடை காலத்திலும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரவில் ஏற்படும் இந்த கொசு கடியால் அரிப்பு ஏற்பட்டு தூக்கத்தை கெடுக்கிறது. கொசு கடியால் ஏற்படும் எரிச்சலைத் தாண்டி, கொசுவின் கடியால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

அதாவது இந்த உயிரினத்திற்கு ஒரு பல் கூட கிடையாது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மனிதர்கள் மரணிக்க இந்த ஒரே உயிரினம் காரணமாக இருக்கிறது.

கொசுவின் எடையே 2.5 முதல் 3 மில்லி கிராம்தான் இருக்கும். தனது எடையைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித ரத்தத்தை அது உறிஞ்சிக் கொள்கிறது.

பார்ப்பதற்கு சிறியதாகத் தெரியும் கொசுவின் பின்புலம் பலமானது. 400 முதல் 450 மில்லியன் ஆண்டுகளாக அவை பூமியில் வாழ்ந்து வருகின்றன. தற்போது வரை 3000 முதல் 3500 வகையான கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 200 வகைகள் மட்டுமே மனிதர்களின் ரத்தத்தை குடிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கொசுத்தொல்லை? வீட்டிலேயே வளர்க்கலாம் இயற்கை கொசு விரட்டி தாவரங்கள்!
Google wants to release millions of mosquitoes

இதற்கிடையே கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு நூதன முயற்சியாக, அமெரிக்காவில் விசித்திரமான சோதனை நடக்கப் போகிறது. அதாவது உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google), அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 3.2 கோடி (32 Million) கொசுக்களைப் பொதுவெளியில் பறக்கவிடுவதற்கு அமெரிக்க அரசிடம் அதிகாரப்பூர்வமாக அனுமதி கோரியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் கீழ் செயல்படும் ‘வெரிலி’ (Verily) என்ற லைஃப் சயின்ஸ் பிரிவின் ‘டிபக்’ (Debug) திட்டத்தின் கீழ் இந்த விசித்திரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வினோதமாகத் தோன்றினாலும், டெங்கு, சிக்குன்குனியா, ஸிகா போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கூகுளின் 'டிக்பக் பிராஜெக்ட்' மூலம் ஆய்வகங்களில் கோடிக்கணக்கான ஆண் கொசுக்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கு 'வோல்பாச்சியா பைப்பியன்டிஸ்'(Wolbachia pipientis) என்ற இயற்கையான பாக்டீரியா தொற்று ஏற்படுத்தப்படுகிறது.

விஞ்ஞானிகள் இந்த வோல்பாக்கியா பாக்டீரியா கொண்ட ஆண் கொசுக்களை மட்டும் காடுகளில் திறந்துவிடுவார்கள். இந்த பாக்டீரியா பாதித்த ஆண் கொசுக்கள், இயற்கையில் உள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்போது, அந்தப் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரிக்காது.

காலப்போக்கில், இது ஒட்டுமொத்த கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவை பரப்பும் வைரஸ்களின் தாக்கத்தையும் கட்டுப்படுத்தும். இதனால், அடுத்த தலைமுறை கொசுக்கள் பிறப்பதே தடுத்து நிறுத்தப்படும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும். அதாவது, நம்மைக் கடித்து இரத்தம் குடிப்பதும், டெங்கு, மலேரியாவைப் பரப்புவதும் பெண் கொசுக்கள் மட்டும்தான். எனவே, ஆண் கொசுக்களை விடுவிப்பதால் மனிதர்களுக்குக் கடிபடும் அபாயம் அதிகரிக்காது.

சிங்கப்பூர் டெங்கு காய்ச்சலை ஒழிக்க இந்த முறையைப் பயன்படுத்திய ஒரே ஆண்டிற்குள், அந்தப் பகுதிகளில் டெங்கு பாதிப்பு 70% குறைந்தது. சிங்கப்பூரின் இந்த வெற்றி உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கூகுள் நிறுவனம் ஏற்கனவே 4 கண்டங்களில் 100 கோடிக்கும் அதிகமான வோல்பாக்கியா கொசுக்களைப் பறக்கவிட்டுப் டெஸ்ட் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

புளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் சோதனை முறையில் ஏற்கனவே இதற்கான முதற்கட்ட ஆய்வுகள் சிறிய அளவில் நடத்தப்பட்டு நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. எனினும், இவ்வளவு பிரம்மாண்ட அளவில் கோடிக்கணக்கான கொசுக்களைப் பொதுவெளியில் விடுவிப்பது இயற்கையான சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்குமா என்றும், எதிர்காலத்தில் இந்த பாக்டீரியாவில் மரபணு மாற்றங்கள் (Mutations) ஏற்பட வாய்ப்புள்ளதா என்றும் ஒருசில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களின் கவலைகளையும், விவாதங்களையும் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.

மற்றொருபுறம், ஜர்னல் ஆஃப் எக்ஸ்பெரிமெண்டல் பயாலஜி இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வின்படி, கொசுக்கள் தங்களை விரட்டும் பூச்சி விரட்டிகளின் வாசனைக்குக் பழகிக் கொள்ளக்கூடியவை எனத் தெரியவந்துள்ளது. அடிக்கடி பூச்சி விரட்டிகளுக்கு ஆளாகும் கொசுக்கள், அந்த வாசனையைத் தங்களது உணவு ஆதாரத்துடன் தொடர்புபடுத்திக் கற்றுக்கொள்வதாக முதன்மை ஆய்வாளர் கிளாடியோ லாஸாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஃபெடரல் பதிவேட்டின்படி, கூகுள் கடந்த டிசம்பர் மாதம் இந்தச் சோதனைப் பயன்பாட்டுக்கான அனுமதியைக் கோரி விண்ணப்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, முதல் ஆண்டில் 1.6 கோடி கொசுக்களும், இரண்டாம் ஆண்டில் மேலும் 1.6 கோடி கொசுக்களும் ஃபுளோரிடா மற்றும் கலிபோர்னியா முழுவதும் விடுவிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்படக்கூடிய பொது சுகாதார நன்மைகள் நியாயமானவையா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், ஒழுங்குமுறை அதிகாரிகள் பாதுகாப்புத் தரவுகள், சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொசு வெளியீடுகளின் தாக்கத்தை நிறுவனம் கண்காணித்து, அதன் கண்டுபிடிப்புகளை எதிர்கால முடிவுகளுக்கு வழிகாட்டப் பயன்படுத்தும்.

கொசுக்களால் பரவும் நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் கொசுக்களைப் பயன்படுத்தும் இந்த முயற்சி மிகவும் அசாதாரணமானது என்பதால், கூகிளின் முன்மொழிவு தற்போது மதிப்பாய்வில் உள்ளது, மேலும் இந்த வெளியீட்டிற்குஅமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) ஒப்புதல் அளிக்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மறுபுறம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை இந்தத் திட்டத்திற்கு ஜூன் 5-ம்தேதிக்குள் அனுமதி வழங்கினால், அமெரிக்கக் காடுகளில் 3 கோடி கூகுள் கொசுக்கள் சிறகடிக்கத் தொடங்கும்.

இதையும் படியுங்கள்:
கொசு கடித்தால் இனி நோய் வராதா? பாக்டீரியா மூலம் கொசுக்களை மாற்றியமைத்த விஞ்ஞானிகள்!
Google wants to release millions of mosquitoes

கொசுக்களைக் கொண்டே கொசுக்களை அழிக்கும் இந்த விசித்திரமான 'ஆபரேஷன்', மனித குலத்தை டெங்கு போன்ற கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Kalki Online
kalkionline.com