

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை அனைத்திலும் யுபிஐ பரிவர்த்தனை தான் நடக்கிறது. பொதுமக்கள் பெரும்பாலும் போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியத் தயாரிப்பாக வெகு விரைவில் சோஹோ பே (ZOHO Pay) எனும் யுபிஐ செயலி அறிமுகத்திற்கு வரவுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் மென்பொருள் நிறுவனமான சோஹோ (ZOHO), கடந்த சில ஆண்டுகளாக மொபைல் செயலிகள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க மொபைல் செயலிகளுக்கு போட்டியாக, இந்தியர்கள் பயன்படுத்தும் வகையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி வருகிறது இந்நிறுவனம். அவ்வகையில் வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக அரட்டை செயலியை அறிமுகப்படுத்தியது.
கடந்த 2021ல் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக அறிமுகமான ‘அரட்டை செயலி’, தற்போது தான் இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் பல லட்சம் பேர் அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் கூகுள் பே, ஃபோன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளுக்கு போட்டியாக சோஹோ பே எனும் புதிய செயலியை சோஹோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் சோஹோ பே, அரட்டை செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளதால், நண்பர்களுடன் பேசிக் கொண்டே பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். மேலும் பல பரிவர்த்தனைகளை தடையிலலாமல் மேற்கொள்ள முடியும் என்பதால், அரட்டை செயலியை ஒரு சூப்பர் செயலியாக இது மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஹோ பே செயலியின் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்ததனைத் துறையில் தனது காலடித் தடத்தை பதித்துள்ளது சோஹோ நிறுவனம். இதன்மூலம் பல செயலிகளில் கிடைக்கின்ற வசதிகள் அனைத்தும், இனி ஒரே இடத்தில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நிதிச் சேவைகள் மற்றும தகவல் தொடர்புகளை ஒருங்கிணைத்து, பயனாளர்களுக்கு புதிய மற்றும் எளிய அனுபவத்தை சோஹோ பே (ZOHO pay) செயலி கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஹோ பே செயலியை இந்நிறுவனம் தற்போது பரிசோதனை செய்து வருகிறது. இறுதிகட்ட சோதனைகள் முடிந்த பின்னரே இந்தச் செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் அடுத்தாண்டு தொடக்கத்தில் சோஹோ பே யுபிஐ செயலி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏற்கனவே இந்நிறுவனம் சார்பில் சோஹோ பிசினஸ் (ZOHO Business) என்ற கடடண செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நாட்டில் கடைநிலை பொதுமக்கள் வரை சோஹோ நிறுவனததின் யுபிஐ செயலி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சோஹோ பே செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் மத்தியில் அரட்டை செயலிக்கு கிடைத்த வரவேற்பு, சோஹோ பே யுபிஐ செயலிக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.