தனியாரைப் போல் மாறும் அரசு மருத்துவமனைகள்..! வந்துவிட்டன பிரீமியம் அறைகள்..!

Premium Rooms in GH
Government Hospital
Published on

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும் கூட ஒரு சிலர் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். போதிய வசதிகள் இல்லாததே இதற்கெல்லாம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக அரசு மருத்துவமனையில் உள்ள பொது வார்டுகள் சுகாதாரம் அற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளைப் போலவே அதிக வசதிகளை அளிக்க அரசு மருத்துவமனைகளும் முன்வந்துள்ளன. இதன்படி தனி அறை, ஏசி வசதி, உணவு உண்ணுமிடம் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட பிரீமியம் சேவை தற்போது 14 அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒருசில அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே பிரீமியம் சேவைகள் செயல்பாட்டில் இருந்துள்ளன. இந்தச் சேவையை இதற்கு முன்பு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) நிர்வகித்து வந்தது. இதிலிருந்து கிடைக்கும் இலாபம் இந்தக் கழகத்திற்கே சென்றது. ஆனால் இனி பிரீமியம் வசதி கொண்ட மருத்துவ அறைகளை அந்தந்த மருத்துவமனைகளே நிர்வகிக்க உள்ளன. இதிலிருந்து கிடைக்கும் இலாபம் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும்.

கடந்த மாதம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியான அரசின் 2 முக்கிய ஆணைகள், அரசு மருத்துவமனைகளை நவீன மயமாக்கி உள்ளது. இதன்படி தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 14 மருத்துவமனைகளில் பணம் செலுத்தும் பிரீமியம் வார்டுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சென்னையைப் பொறுத்தவரை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை (RGGGH), ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை கஸ்தூரிபாய் காந்தி (KGH) மருத்துவமனை மற்றும் சென்னை IOG மருத்துவமனை ஆகியவற்றில் பிரீமியம் வார்டுகள் உள்ளன.

மேலும் கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை மறறும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 14 மருத்துவமனைகள் பிரீமியம் வார்டை சுதந்திரமாக நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. பணம் செலுத்தும் பிரீமியம் வார்டுகள், பொது வார்டுகளை விட அதிக வசதிகளைக் கொண்டதாக இருக்கும். இதன் காரணமாக குறைந்த செலவிலேயே தனியார் மருத்துவமனைகளைப் போன்ற அனுபவம் பொதுமக்களுக்கு கிடைக்கும்.

இதன்படி ஓர் இரவுக்கு ஒரு அறையின் கட்டணம் ரூ.1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓர் இரவுக்கு டீலக்ஸ் ஏசி அறையின் கட்டணம் ரூ.2,000 ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்:
செம அறிவிப்பு..! இனி இந்த சிகிச்சைக்கும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தலாம்!
Premium Rooms in GH

இதுவரை இப்படியொரு வசதி அரசு மருத்துவமனைகளில் இருப்பதே பொதுமக்கள் பலருக்கும் தெரியாது. இருப்பினும் இதுவரை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் பிரீமியம் வார்டுகளின் மூலம் ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளன. மதுரையில் உள்ள அரசு மருத்துவமனை ஆண்டுக்கு ரூ.75 இலட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளது.

அரசு மருத்துவமனைக்குச் செல்லும் பொதுமக்கள் பிரீமியம் வார்டு வேண்டுமெனில் அது குறித்த தகவல்களை அந்தந்த மருத்துவமனைகளில் கேட்டு, அட்மிட் செய்யலாம். இந்த வசதி பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள பொது வார்டுகளும் மேம்படுத்தப்படும் என அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மருத்துவ காப்பீட்டில் பிரீமியம் தொகையைக் குறைக்க என்ன செய்யலாம்?
Premium Rooms in GH

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com