
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரையிலான மருத்துவ சேவைகளைப் பெற முடியும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இலட்சக்கணக்கான பொதுமக்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக மனநல சிகிச்சைக்கும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 51 வகையான நோய்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருசில தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்க மறுப்பதால், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த இதற்கென பிரத்யேகமான செயலியை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது.
இதற்கிடையில் மனநல நோயாளிகளும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.51 இலட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த அறிவிப்பு மனநலக் காப்பகங்களில் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இல்லாத மனநல நோயாளிகளையும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்குமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 108 மனநலக் காப்பகங்களில் சிகிச்சை பெறும் 5,944 நோயாளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 54 அரசு மனநலக் காப்பகங்களும், 54 தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மனநலக் காப்பகங்களும் உள்ளன. இங்கு சிகிச்சை பெற்று வரும் மனநோயாளிகள் பலருக்கும் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் ஏதுமில்லை. ஆகையால் எவ்வித ஆவணமும் இன்றி மனநோயாளிகளை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து, சிகிச்சை அளிக்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் பரிந்துரை செய்தார்.
இதனை மிகக் கவனமாக பரிசீலித்த தமிழ்நாடு அரசு, இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததோடு, ரூ.51 இலட்சம் நிதியையும் ஒதுக்கியுள்ளது.