
ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் மற்றும் சேர்ப்பு உள்ளிட்ட திருத்தப் பணிகளை மேற்கெள்ள தற்போது பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தச் சேவையை மேலும் எளிதாக்க பொது சேவை மையங்களை அமைக்க புதுச்சேரி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குப் பிறகு பொதுமக்கள் எங்கும் அலையாமல் அருகிலுள்ள பொது சேவை மையங்களிலேயே ரேஷன் கார்டு திருத்தங்களை மேற்கெள்ளலாம் என அமைச்சர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரேஷன் கார்டு திருத்தப் பணிகள் அனைத்தும் பொது சேவை மையங்களின் மூலம் எளிதாக்கப்படும் என அமைச்சர் திருமுருகன் அறிவித்திருந்தார். அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான தொழில்நுட்ப பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 18-க்குப் பிறகு பொது சேவை மையங்களில் ரேஷன் கார்டு திருத்தப் பணிகள் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு திருத்தப் பணிகள் குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை வெளியிட்ட அறிக்கையில், “ரேஷன் கார்டு திருத்தப் பணிகளுக்கான தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் ஆகஸ்ட் 18-க்குப் பிறகு பொதுமக்கள் அனைவரும் அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி ரேஷன் கார்டு திருத்தத்தை மேற்கொள்ளலாம்.
இதன்படி குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் பெயரைச் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் மாற்றம், ஆதார் இணைப்பு, முகவரி மாற்றம், உறுப்பினர் விவரங்கள் புதுப்பிப்பு, இ-ரேஷன் கார்டு பெறுதல் மற்றும் ரேஷன் கார்டை ஒப்படைத்தல் உள்ளிட்ட பல சேவைகள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் பொது சேவை மையங்கள் செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் திருத்தத்தை மேற்கொள்ள தொலைவில் இருந்து இனி யாரும் குடிமைப் பணி வழங்கல் துறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக வயதான மூத்த குடிமக்களுக்கு பொது சேவை மையங்கள் உதவிகரமாக இருக்கும். ரேஷன் கார்டு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை பொது சேவை மையங்கள் எளிதாக்குகின்றன.
https://pdsswo.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் பொது சேவை மையங்கள் மூலமாகவோ ரேஷன் கார்டு திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இதுதவிர பொதுமக்களின் வசதிக்காக குடிமைப் பொருள் வழங்கல் துறை வளாகத்திலும் ஒரு பொது சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ரேஷன் கார்டு திருத்தப் பணிகளை மேற்கொள்ள தனியாக 3 கவுண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.