.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை வீடு தேடி வந்து வழங்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்கு சமீபத்தில் செவி சாய்த்த தமிழக அரசு, சோதனை முயற்சியாக முதலில் மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க முடிவு செய்தது. இதற்காக இத்திட்டம் ஏற்கனவே அமலில் இருக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகத்திற்கு தமிழக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பிறகு திண்டுக்கல், திருநெல்வேலி, சென்னை, நீலகிரி, நாகப்பட்டினம், கடலூர், தருமபுரி, சிவகங்கை, ராணிப்பேட்டை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 வட்டங்களை மட்டும் தேர்வு செய்து ரேஷன் பொருட்களை வழங்க முடிவு செய்தது தமிழக கூட்டுறவு துறை.
சோதனை முயற்சியாக மேற்கொண்ட இந்தத் திட்டத்தில் முதலில் 70 வயைதத் தாண்டிய 15 இலட்சம் மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு செல்ல திட்டமிட்டனர். அதில் 7.5 இலட்சம் மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் 2.25 இலட்சம் மூத்த குடிமக்களின் வீடுகள் பூட்டிய நிலையில் இருந்ததால், ரேஷன் பொருட்களை வழங்க முடியாமல் போனது. இதுதவிர சில 2.5 % முதல் 3% வரையிலான மூத்த குடிமக்கள் ஏற்கனவே இறந்து விட்டதால் தமிழக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ரேஷன் பொருட்களை வழங்கவில்லை.
மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும் சோதனை முயற்சி கடந்த ஜூலை 1 முதல் தொடங்கப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 50% மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினாலும், உணவுத்துறை அதிகாரிகள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும் விரைவில் தமிழகம் முழுக்க ரேஷன் பொருட்களை வீட்டிற்கே வந்து வழங்கும் திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்தில் ஒரு நாள் மட்டும் மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் எந்த தேதியில் அதிகளவில் ரேஷன் பொருட்களை வாங்கியுள்ளனர் என்ற தகவல் திரட்டப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் கிடைத்ததும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினால் அனைவருக்கும் எளிதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஏதுவாக இருக்கும் என உணவுத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.