

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இந்நிலையில் தமிழக அரசின் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தற்போது தமிழகம் ஆறாவது இடத்திற்கு பின் தங்கிவிட்டது. ஒரு நாளைக்கு 65 பேர் என ஓராண்டில் தமிழ்நாட்டில் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இந்தியாவின் தற்கொலையின் தலைநகராக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.பல ஆயிரம் கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்காமல்அறநிலையத்துறை நேரடியாக நிர்வாகம் செய்து வருகின்றது.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் ஆண்டுக்கு ஆண்டு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் போதைப் பொருளை ஒழிப்புக்காக எந்த அம்சமும் தமிழக அரசின் உரையில் இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் 50 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போக்கோ வழக்குகள் 55 சதவீதமும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 33 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையில் ரூ.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசுடன் பல்வேறு முதலீட்டாளர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் வெறும் காகிதமாகவே உள்ளன. முதலீட்டாளர்கள் இலக்கு தமிழ்நாடு அல்ல, உண்மையான தகவல்களின் தரவுகளை பார்த்தால் முதலீட்டாளர்களின் இலக்கு தமிழ்நாடு இல்லை என்பது தெரிகிறது. தமிழக அரசு தயாரித்து தந்திருக்கும் அறிக்கையில் மக்களை தவறாக வழிநடத்தும் பல்வேறு தகவல்கள் உள்ளன .
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் ஆளுநரின் சபை புறக்கணிப்பு குறித்தும் முதலமைச்சர் தனது கருத்தை அவையில் வாசித்தார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் எனவும் ஆளுநர் உரையை படிக்காமல் சென்றதை அவை ஏற்கவில்லை எனவும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரை இங்கு படிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது எனவும் ஆளுநர் உரையை விலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டமன்றத்தின் மாண்பைக்காத்து தீர்மானத்தை நிறைவேற்றி தந்த உறுப்பினர்களுக்கு நன்றி எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளை இணைத்து நாடாளுமன்றத்தில் இதன் மீதான கோரிக்கை வைக்கப்படும்.
மேலும் ஆளுநர் உரை படிக்கப்பட்டதாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் சட்டமன்றத்தின் மாண்பை காத்து தீர்மானத்தை நிறைவேற்றி வைத்ததாகவும் பேரவையில் தான் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் நன்றி கூறினார். ஆளுநர் நடவடிக்கை அரசு அமைப்பை அவமதிக்கும் செயல் என ஆண்டின் துவக்கத்தில் ஆளுநர் உரையை விளக்கும் வகையில் அரசியல் அமைப்பை திருத்த நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையில் சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.