

இந்தியர்களின் மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். அரசின் நலத்திட்டங்களை பெறுவது தொடங்கி ஒரு சிம்கார்டு வாங்குவது, முதலீடு செய்வது , வங்கி கணக்கு தொடங்குவது என பெரும்பாலான இடங்களில் நம்முடைய அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை தான் கேட்கிறார்கள்.
நம்முடைய ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் அப்டேட்டாக வைத்திருப்பதும் அவசியம். இல்லை என்றால் பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்காமல் போகலாம். உங்களுடைய மொபைல் நம்பரை மாற்றினாலோ அல்லது வேறு வீட்டிற்கு குடியேறுகிறீர்கள் என்றாலோ உடனடியாக ஆதாரில் அந்த தகவல்களை அப்டேட் செய்து விடுவது நல்லது.
வழக்கமாக ஆதார் தொடர்பான தகவல்களை நாம் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ செயலியான mAadhaar App என்ற செயலி வாயிலாக தான் பெற்று வந்தோம். இதன் மூலம், ஆதார் பதிவிறக்கம், விவரங்களை ஆன்லைனில் திருத்துதல், மற்றும் Virtual ID (VID) உருவாக்குதல் போன்ற சேவைகளை மிக எளிதாகப் பெற முடிந்தது.
இதற்கிடையே பழைய எம்ஆதார் செயலியை விரைவில் திரும்பப் பெறப்போவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, பயனர்கள் அனைவரும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்கள் கொண்ட புதிய ஆதார் செயலியை (Aadhaar App) பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதம்) பழைய ஆதார் செயலிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஆதார் செயலி பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பயனர்களின் தனியுரிமைக்கு (Privacy) அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஆதாரில் நம்முடைய தகவல்களை அப்டேட் செய்வதற்கான பல்வேறு பிரத்தியேக வசதிகளும் புதிய ஆதார் செயலியில் உள்ளது என UIDAI கூறியுள்ளது.
புதிய ஆதார் செயலியின் முக்கிய சிறப்பம்சங்கள்
பழைய செயலியை விட புதிய செயலியில் உள்ள மேம்பட்ட முக்கிய வசதிகளின் பட்டியலை பார்க்கலாம் வாங்க:
* தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களைப் பகிர்தல் (Selective Data Sharing): புதிய செயலியின் மிகப்பெரிய அம்சம் இதுவாகும். சரிபார்ப்புகளின் போது உங்களின் முழு ஆதார் விவரங்களையும் தராமல், தேவைப்படும் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பகிரலாம் (Data Minimisation). இதன் மூலம் உங்கள் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.
* உங்கள் ஆதார் விவரங்கள் எங்கு, எப்போது சரிபார்க்கப்பட்டன (Authentication History) என்ற வரலாற்றைக் கண்காணிக்கும் வசதி இதில் உள்ளது.
* அடையாளச் சரிபார்ப்பு மற்றும் நபர் நேரில் இருப்பதை உறுதி செய்ய இந்த முக அங்கீகார வசதி (Face Authentication) பயன்படுத்தப்படும்.
* QR தொடர்பு அட்டை (QR Contact Card), உங்களின் தொடர்பு விவரங்களை எளிதாகப் பகிர்வதற்கு இந்த வசதி உதவும்.
* பயோமெட்ரிக் லாக்/அன்லாக் வசதியுடன் பயனர்கள் தங்களின் கைரேகை மற்றும் விழித்திரை (Biometric) தரவுகளை ஒரே கிளிக்கில் எளிதாகப் பூட்டவோ அல்லது திறக்கவோ முடியும்.
* முகவரி மாற்றச் சேவைகளுடன் சேர்த்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் இந்த செயலி மூலமாகவே புதுப்பித்துக் கொள்ள முடியும்.
* நகல் (Physical copy) எடுப்பதைத் தவிர்க்க, QR கோடு மூலம் எளிதாக அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்.
* ஒரு குடும்பத்தில் உள்ள ஐந்து பேரின் ஆதார் விவரங்களை (Profiles) ஒரே செயலியில் நிர்வகிக்கலாம்.
இதற்கிடையே பொதுமக்கள் தங்களுடைய முகவரி உள்ளிட்ட தகவல்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜூன் 14-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.