

இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து வணிக நிறுவனங்களிலும் ரொக்கப்பரிவர்த்தனைகளை விட UPI பரிவர்த்தனைகள் தான் அதிகம் நடந்து வருகிறது. இன்று காலையில் டீ குடிக்க டீக்கடைக்கு போவது தொடங்கி இரவில் ஓட்டலில் சாப்பிடுவது வரை எல்லாமே UPI தான் என்கிற அளவில் வளர்ந்துவிட்டது.
யுபிஐ (UPI - Unified Payments Interface) என்பது உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் உடனடியாகப் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் ஒரு இந்திய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையாகும். இது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைப்பால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
தனிநபர்களுக்கு இடையே செய்யப்படும் பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம் மற்றும் நொடிப்பொழுதில் பணம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குச் சென்று சேரும்.
தேசிய கொடுப்பணர்வு அமைப்பால் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த UPI தொழில்நுட்பம், இன்று இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, 24 மணி நேரமும், ஒரே நொடியில் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தை நேரடியாக அனுப்ப முடியும். உள்நாட்டை கடந்து சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இந்தியாவின் இந்த UPI கட்டண முறையை தங்களின் நாடுகளிலும் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்கியுள்ளன.
ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யுபிஐ வணிகக் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நிலையில், பெரிய வணிக நிறுவனங்களின் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மீண்டும் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தற்போது இந்தியாவில், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற UPI செயலிகள் மூலம் நடக்கும் பணப் பரிவத்தனைகளுக்கு(UPI கட்டணம்), 5 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை புதிய கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India - NPCI) வட்டாரங்கள் தெரிவித்துள்ளபடி, இந்த புதிய வணிக கட்டணம் 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை விதிக்கப்பட உள்ளது.
உதாரணமாக ஒரு கடையில் ரூ.10,000 மதிப்புள்ள வர்த்தகம் நடந்தால், அதற்கு அதிகபட்சமாக ரூ.5 முதல் ரூ.7 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய கட்டண முறை சிறு கடைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள், உள்ளூர் கடைகள், சாதாரண பொதுமக்கள் அல்லது ஒரு தனிநபர் தங்களுக்குள் தனிப்பட்ட முறையில் அனுப்பும் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, நீங்கள் மற்றவர்களுக்கோ அல்லது கடைகளில் செய்யும் சாதாரண UPI பரிவர்த்தனைகளுக்கோ எவ்விதக் கட்டணமும் இல்லை.
இது கடைகளில் உள்ள கியூ.ஆர். கோடு (QR Code - Quick Response) மூலம் நடக்கும் பெரிய அளவிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் பெரிய சில்லறை வர்த்தகர்கள், ஆன்லைன் வணிகத் தளங்கள், பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் விதிக்க பரிசீலிக்கப்படுகிறது.
இந்தியாவின் அதிகரித்து வரும் மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சி மற்றும் புவியியல் ரீதியான பரவல் போன்றவற்றின் காரணமாக, வரும் ஆண்டுகளில் UPI பயன்பாடு பத்து மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள், இத்தளத்தில் கூடுதலாக 600 மில்லியன் பயனர்களை இணைவார்கள் என்றும், மாதத்திற்கு 100 முதல் 150 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தக்கூடும் என்றும் அது கணித்துள்ளது. இருப்பினும், UPI-யின் வளர்ச்சி வேகம் குறைந்து வருவதும், கட்டமைப்பு ரீதியான நிதிப் பற்றாக்குறையும் இந்த அளவிலான வளர்ச்சியை அடைவதில் சவாலாக உள்ளன
தற்போது இந்தியாவில் UPI பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட வருகின்றன. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப செலவுகளை வங்கிகளும், கூகுள் பேஇ போன்பே போன்ற நிறுவனங்களுமே ஏற்றுக்கொள்கின்றன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வங்கிகளின் பராமரிப்பு செலவுகளை சரி செய்யவும், இந்த மிகக் குறைந்த கட்டண முறையை கொண்டு வர நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.