

ஈரான் போர் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் பெட்ரோல் டீசல் விலை யை மத்திய அரசு உயர்த்தக்கூடும் என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் இழப்புகளைச் சரிசெய்ய இந்த விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால், நாட்டின் சில்லறைப் பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கைத் தாண்டிச் செல்லக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் (Oxford Economics) அமைப்பின் முன்னணி பொருளாதார நிபுணரான அலெக்ஸாண்ட்ரா ஹெர்மன் பிரசாத் (Alexandra Hermann Prasad) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், வரும் நவம்பர் மாதமே பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவதற்கான கடைசி மற்றும் யதார்த்தமான தருணமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைவதற்கு முன்பு, எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு நவம்பர் மாதமே அரசுக்குக் கிடைக்கும் மிகக் குறுகிய கால அவகாசம் (Narrow Window) ஆகும்.
இந்த விலை உயர்வு பெரிய அளவில் இருக்காது என்றும், கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த 7.5% விலை உயர்வில் பாதியளவு மட்டுமே (மிதமான அளவில்) இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (குறிப்பு: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலின் போது மட்டுமே எரிபொருள் விலையில் அந்த 7.5% உயர்வு காணப்பட்டது).
நவம்பரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டால், சில்லறை பணவீக்கம் (Retail Inflation) அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 2027-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி - மார்ச் காலாண்டில்) 6.5 சதவீதமாகவும் உயரக்கூடும் என்று ஹெர்மன் பிரசாத் தெரிவித்துள்ளார். இது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கான 2% முதல் 6% என்ற வரம்பிற்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸின் கணிப்புகள், மத்திய வங்கியின் மதிப்பீடுகளை விட அதிகமாக உள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் தனது பணவியல் கொள்கை ஆய்வில், இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பணவீக்கம் 6% ஆக இருக்கும் என்றும், ஜனவரி-மார்ச் காலாண்டில் அது 5.7% ஆகக் குறையும் என்றும் கணித்திருந்தது.
ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ், அடுத்த ஆண்டு (2027) விலை அழுத்தங்கள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கிறது. 2027 நிதியாண்டைப் பொறுத்தவரை, பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என்று ஹெர்மன் பிரசாத் கணித்துள்ளார்; இது ரிசர்வ் வங்கியின் 5.2 சதவீத கணிப்பை விட அதிகமாகும்.
ஒருவேளை நவம்பர் மாதத்தில் அரசு எரிபொருள் விலையை உயர்த்தவில்லை என்றால், பணவீக்கச் சூழல் மாறுபடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, நவம்பர் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை எனில், தனது பணவீக்கக் கணிப்புகள் வரும் காலாண்டுகளில் 10 முதல் 30 அடிப்படை புள்ளிகள் (basis points) வரை குறையக்கூடும் என்று ஹெர்மன் பிரசாத் கூறியுள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதக் கொள்கை முடிவுகளில் வட்டி விகிதங்களை தலா 0.25% உயர்த்த நேரிடலாம் என்றும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கணித்துள்ளது.
தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் மீதான விரிவடைந்து வரும் போராட்டங்கள் பொருளாதார வளர்ச்சியைப் பெரிதாகப் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். ஏனெனில், அதனால் ஏற்பட்ட இடையூறுகள் பெரும்பாலும் டெல்லிக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டிருந்தன, மேலும் அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகக் குறைவாகவே இருந்தன என்றும் அலெக்ஸாண்ட்ரா ஹெர்மன் பிரசாத் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.
ஈரான் போர் தொடங்கியதும் இந்தியாவுக்கு தலைவலி ஆரம்பித்தது. இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தேவையின் பெரும்பகுதியை ( 80%-க்கும் அதிகம்) வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.
போரினால் கச்சா எண்ணெய் சப்ளை நின்று போனதால் வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி ஆகியவற்றை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியவில்லை.
ஏனெனில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது சாமானிய மக்கள் முதல் வணிகர்கள் வரை கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையையும், நாட்டின் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் ஒரு முக்கியமான விஷயமாகும். இருந்தாலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மே மாதம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.76-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தக்கூடும் என்ற தகவல் சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசோ அல்லது பெட்ரோலிய அமைச்சகமோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.