.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தற்போது சர்வதேச அளவில் இருக்கும் எல்பிஜி (LPG) விலையை வைத்து இந்தியாவில் சிலிண்டர் விற்பனை நடைபெற்றால், வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்று ரூ.1,695க்கு விற்க வேண்டிவரும் என அதிர்ச்சியூட்டும் தகவலை மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் எல்பிஜி (LPG) விலை, உற்பத்தி செய்யும் நாடுகள், இறக்குமதிச் செலவுகள் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்க வரிகள்/மானியம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் பதற்றத்தால், சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு, உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவில் சமையல் கேஸ் (LPG) தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுத்தது.
மேலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாகவும் மக்களின் அச்சத்தின் காரணமாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. விலை ஏற்றத்தை சமாளிக்க மத்திய அரசு வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி விலையை உயர்த்தியும், விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்தும் நிலைமையை கட்டுக்குள் வைத்தது.
பின்னர் ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் காரணமாக படிப்படியாக உலக நாடுகளில் இயல்பு நிலை திரும்பியது.
இதனால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கடந்த 6 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டர் விலை ரூ.1546 வரை உயர்ந்தது. அதாவது ஆறு மாதங்களில் இதன் விலை 1580 ரூபாயில் இருந்து ரூ. ரூ.3,282 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சென்னையில் வீட்டு உபயோக (14.2 கிலோ) எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.957.50 ஆகவும், வணிக பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டரின் விலை ரூ.3.106 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் திடீரென அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் உலகளாவிய சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) பேரலுக்கு $94 வரை உயர்ந்துள்ளது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் எல்பிஜி விலை குறித்து எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி எழுத்துப் பூர்வமாக கொடுத்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதில் அவர், ‘ஒரு மெட்ரிக் டன் எல்பிஜி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 780 டாலராகவும், தற்போதைய ஜூன் மாதத்தில் அது 796 டாலராகவும் இருந்து வருகிறது. அந்த சர்வதேச விலைகளின் அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியாவில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் சந்தை விலை சுமார் ரூ. 1,695-ஆக இருந்திருக்கும் என்று கூறினார்.
இதனை கொண்டு விலை நிர்ணயக்கப்பட்டால் இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 1,695 வரை செல்லும். ஆனால், அரசு அதற்கான மானியத்தை வழங்கி தற்போது சிலிண்டர் விலையை ரூ. 942 என விநியோகித்து வருகிறது.
இதன் மூலம் தற்போது மத்திய அரசு ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு மானியமாக 700 ரூபாயை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஜூன் மாதம் 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி (LPG) சிலிண்டர் ஒன்றுக்கு மறைமுக மானியம் (செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ. 700-க்கும் அதிகமாக இருந்தது. ஜூலை மாதத்திலும் கூட, ஒவ்வொரு 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டருக்கான மறைமுக மானியம் ரூ. 500-க்கும் அதிகமாகவே உள்ளது என்று கோபி தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
எரிபொருள் போக்குவரத்திற்கான முக்கிய உலகளாவிய கடல் பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) இடையூறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அந்த அறிக்கை விவரித்தது. முன்னதாக, இந்தியாவின் LPG தேவையில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டது; இதில் கிட்டத்தட்ட 90 சதவீத இறக்குமதிகள் அந்த நீரிணை வழியாகவே வந்தன.
இந்தச் சவாலை எதிர்கொள்ள, அரசு உள்நாட்டு LPG உற்பத்தியை ஒரு நாளைக்கு 34 ஆயிரம் மெட்ரிக் டன்களிலிருந்து (TMT) 54 TMT-ஆக அதிகரித்தது.
உலகளாவிய விநியோகச் சிக்கல்கள் இருந்தபோதிலும், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. மார்ச் மற்றும் ஜூன் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில், 56 கோடிக்கும் அதிகமான உள்நாட்டு LPG சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன;
இதில் உஜ்வாலா பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 12 கோடிக்கும் அதிகமான சிலிண்டர்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.