

சென்னை அடையாறு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொல்காப்பிய பூங்கா தற்போது புதுப்பிக்கப்பட்ட நிலையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுக்குள் நுழைந்ததுமே ஏதோ காட்டிற்குள் வந்து விட்டோமா? என்ற ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி ஏற்படுவதை இங்கு வந்து செல்பவர்களால் தவிர்க்க முடியாது.
மரங்களையும், தாவரங்களையும், சிறு உயிரினங்களையும் ரசிப்பவர்களுக்கு இந்த பூங்கா ரொம்பவே பிடிக்கும். மாணவர்களுக்கும், நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக தொல்காப்பிய பூங்கா அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த பூங்காவில் 3.20 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடர்ச்சியாக நடைபயற்சி மேற்கொள்ள முடியும். இடை, இடையே ஓய்வெடுக்க மூங்கில் கூடாரங்கள். நடை பயணத்தின்போதே, நீரோடைகளையும், அதில் சுற்றி திரியும் பறவை கூட்டங்களையும், அரிய வகை தாவரங்களையும், இயற்கை சூழ்ந்த ரம்மியமான நீர்நிலையையும் ரசிக்க முடியும். இந்த பூங்காவின் மொத்த பரப்பு 58 ஏக்கராகும்.
நீர் மேலாண்மைக்கும், சுற்றுசூழல், இயற்கை, உடல் ஆரோக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) கீழ் ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை கடந்த அக்டோபர் 24-ம்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தப் பூங்காவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் திறக்கப்பட்டது. பின்னர் வந்த அதிமுக அரசு, அப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என அழைத்து வந்தது. . கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்கா இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை 58 ஏக்கர் பரப்பளவில் விரிவுப்படுத்தி பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வரும் வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பூங்காவில் புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, 3.7 கிலோமீட்டர் நீள நடைபாதை, இணைப்பு பாலம் ஆகிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ.9 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய தொங்குப் பாலம் (Skywalk bridge) கட்டப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் பட்டாம்பூச்சி தோட்டம், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி தியேட்டர், உணவு இடம், கழிவறைகள், நடைபாதைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உள்ளன.
தொல்காப்பிய பூங்காவினை பொதுமக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் பார்வையிடலாம். ஆனால், பூங்காவை பார்வையிட இணையதளம் மூலம் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்கள் அதிகபட்சம் 100 மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பார்வையிடலாம்.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் செவ்வாய், சனிக்கிழமைகளிலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் வெள்ளிக்கிழமைகளிலும், தனியார் பள்ளிகள் திங்கள், புதன், மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முன்பதிவு செய்யலாம்.
பூங்காவின் பராமரிப்புக்காக வியாழக்கிழமை விடுமுறை விடப்படுகிறது.
அனைத்து நாட்களிலும், காலை 6.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
கட்டண விவரத்தை பொறுத்தவரையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும். பொது மக்களுக்கு ஒரு நபருக்கு ரூ.20, நடைபயிற்சிக்கு ஒரு மாதத்திற்கு ரூ.500, 3 மாதங்களுக்கு ரூ.1,500, 6 மாதங்களுக்கு ரூ.2,500, 12 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு மற்றும் கட்டணங்களை www.crrt.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
கார் பார்க்கிங்கிற்கு ரூ.20ம், வேன் மற்றும் பேருந்திற்கு ரூ.50ம், கேமராவிற்கு ரூ.50ம், வீடியோ கேமராவிற்கு ரூ.100ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வார இறுதிநாட்களில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க விரும்புபவர்களுக்கு தொல்காப்பிய பூங்கா சூப்பரான ஸ்பாட். சென்னை மக்களுக்கு வீக் எண்டை குடும்பத்துடன் சென்று குதுகலிக்க சூப்பரான ஸ்பாட் கிடைச்சிடுச்சி.