
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித் தேர்வுகளின் மூலம் அரசு காலிப் பணியிடங்களை ஆண்டுதோறும் நிரப்பி வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டு ஜூன் 20-இல் 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்2 தேர்வு அறிக்கை வெளியானது. இதன்படி செப்டம்பர் 14 இல் தேர்வு நடைபெற்று, நடப்பாண்டு மே மாதத்தில் தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
இந்நிலையில் குரூப்2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை தற்போது டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி வருகின்ற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1 வரை மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப்2 கலந்தாய்வு குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-II தேர்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 5 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியானது. இதனடிப்படையில் 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 28 இல் தொடங்கி ஆகஸ்ட் 1 இல் முடிவடையும்.
இந்தக் கலந்தாய்வு பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள எண்.3, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வாணைய சாலை, சென்னை 600 003 என்ற முகவரியில் இருக்கும் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அனைவருக்கும் கலந்தாய்விற்கான நேரம், நாள் மற்றும் பிற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அழைப்பாணையை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அதோடு தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும். அஞ்சல் மூலமாக யாருக்கும் தனியே தகவல்கள் தெரிவிக்கப்படாது. தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி வரத் தாமதமானால், இணையதளத்தில் இருக்கும் அழைப்பாணையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
மூலச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைத்து தேர்வர்களும் கலந்தாய்விற்கு உட்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்று உறுதி அளிக்க முடியாது. காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியான தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் கலந்தாய்விற்கு தேர்வர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். நேரம் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.