
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், கடந்த 3-ம்தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரியை சீர்த்திருத்தி அறிவித்த பிறகு நாட்டின் பல்வேறு பொருட்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. குறிப்பாக, கார்களின் விலை பன்மடங்கு குறைந்துள்ளது. இந்த வரிச் சீர்திருத்தம், வாகனங்களின் விலையை குறைத்து, நுகர்வோர் மத்தியில் தேவையை அதிகரித்து, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கும் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின்படி கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டர் வாகனங்களுக்கான வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வரிகுறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, டாடா, மஹிந்திரா, ஹுண்டாய் போன்ற பட்ஜெட் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் கார்கள் மட்டுமின்றி ஜெர்மனி அதிநவீன சொகுசு காரான ஆடி நிறுவனமும் தனது கார்களின் விலையை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
கார்களின் மாடல்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம்வரை விலை குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. அந்த வகையில் ஆடி காரின் எந்த மாடல் எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம்.
Audi A6 - இந்த மாடலின் முந்திய விலை ரூ.67 லட்சத்து 38 ஆயிரம். தற்போதைய விலை ரூ.63 லட்சத்து 74 ஆயிரம். அதாவது, ரூ.3.64 லட்சம் குறைந்துள்ளது.
Audi Q8 - இந்த மாடலின் முந்திய விலை ரூ. 1 கோடியே 17 லட்சத்து 49 ஆயிரம். தற்போதைய விலை ரூ.1 கோடி 09 லட்சத்து 66 ஆயிரம். அதாவது, ரூ.7.83 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.
Audi Q5 - இந்த மாடலின் முந்திய விலை ரூ.68 லட்சத்து 30 ஆயிரம். தற்போதைய விலை ரூ.63 லட்சத்து 75 ஆயிரம். அதாவது, ரூ.4.55 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.
Audi Q7 - இந்த மாடலின் முந்திய விலை ரூ.92 லட்சத்து 29 ஆயிரம். தற்போதைய விலை ரூ.86 லட்சத்து 14 ஆயிரம். அதாவது, ரூ.6.15 லட்சம் குறைந்துள்ளது.
Audi A4 - இந்த மாடலின் முந்திய விலை ரூ.48 லட்சத்து 89 ஆயிரம். தற்போதைய விலை ரூ.46.25 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது. அதாவது, ரூ.2.64 லட்சம் குறைந்துள்ளது.
Audi Q3 - இந்த மாடலின் முந்திய விலை ரூ.46 லட்சத்து 14 ஆயிரம். தற்போதைய விலை ரூ.43 லட்சத்து 07 ஆயிரம். அதாவது, ரூ.3.07 லட்சம் குறைந்துள்ளது.
அதேபோல் மற்றொரு சந்தோஷமான விஷயமாக மெர்சிடிஸ் பென்ஸ் காரின் விலையும் சுமார் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை குறைய உள்ளது.
தற்போது ஈ-கிளாஸ் எல்டபிள்யூபி (E-Class LWB) ரூ.83 - 96.9 லட்சத்திற்கு(எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விற்கப்படுகிறது. வரி குறைப்பிற்கு பின் ரூ.6 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்பட்டு சுமார் ரூ.91 லட்சம் விலையில் வாங்க முடியும்.
BMW 5 சீரிஸ் லாங் வீல் பேஸ் மாடலுக்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த மெர்சிடீஸ் E-கிளாஸ் லாங் வீல் பேஸ் செடான் மாடல். அதேபோல், GLE 450 தற்போது ரூ.1.15 கோடிக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இதன் விலை ரூ.6 லட்சம் குறைந்து, ரூ.1.07 கோடிக்கு (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) கிடைக்கும்.
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் ஆனது மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இ200, இ220டி மற்றும் இ450 4மேட்டிக் ஏஎம்ஜி லைன் என்பன அந்த 3 வேரியண்ட்கள் ஆகும். வரி குறைப்பிற்கு பின்பு இவை மூன்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.78.5 லட்சம், ரூ.80.5 லட்சம் மற்றும் ரூ.91.7 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த விலைகளை காட்டிலும் இவை ரூ.6 லட்சம் வரையில் குறைவாகும்.
ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபுள்யூ போன்ற கார்களை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவுகளில் ஒன்றாகும். ஜிஎஸ்டி வரியால் ஆடி காரின் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. கார்களின் விலையும் ரூ.7¾ லட்சம் வரை குறைந்துள்ளதுடன் தீபாவளி பண்டிகையும் நெருங்குவதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.