

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், 57-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி-GST) கவுன்சில் கூட்டம் (GST Council Meeting) நாளை மறுதினம் (அக்டோபர் 8-ம்தேதி)டெல்லியில் நடைபெற உள்ளது.
முன்னதாக, இக்கூட்டம் நாளை (அக்டோபர் 7-ம்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இக்கூட்டம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு, நாளை மறுதினம் (அக்டோபர் 8-ம்தேதி) நடைபெறும் என ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் காலை 11:00 மணிக்கு இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது முதலில் செப்டம்பர் 12 அன்று திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு காரணமாக முதலில் செப்டம்பர் 12-ம்தேதி நடைபெறவிருந்த இந்த கூட்டம் அக்டோபர் 7-ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் தேதி மாற்றியமைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பதிவு செய்தல், வரி விவரத் தாக்கல் (return filing) மற்றும் வரித் திரும்பப் பெறுதல் (refund) நடைமுறைகளில் பல முக்கிய அதிரடி மாற்றங்கள் எடுக்கப்படும் என தெரிகிறது.
குறிப்பாக நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் வணிகர்களுக்கு சாதகமாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களும் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளும் நேரடியாகப் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான ஜிஎஸ்டி வரிப்பகிர்வு, உள்ளீட்டு வரி வரம்பு (ITC) நடைமுறைகளை எளிதாக்குதல், வரி அமலாக்கம் மற்றும் ஜிஎஸ்டி தொடர்பான முக்கியப் கொள்கை முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.
வணிகர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஜிஎஸ்டி பதிவு , கணக்குத் தாக்கல் (Returns) மற்றும் ரீஃபண்ட் வழங்கும் உத்திகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது, வணிகர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைப்பது மற்றும் குறிப்பிட்ட ஜிஎஸ்டி வழக்குகளில் கைது செய்யும் அதிகாரத்தை குறைப்பது அல்லது நீக்குவது குறித்த பல முக்கியப் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும்.
ஜிஎஸ்டி தொடர்பான தவறுகளைக் கையாளுதல் மற்றும் இன்புட் டேக்ஸ் கிரெடிட் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து, வரி இணக்கத்திற்கான நேரத்தையும் செலவையும் குறைப்பதற்கான முக்கியச் சீர்திருத்தங்கள் இந்த ஆலோசனையில் இடம்பெறுகின்றன.
குறிப்பாக வரி அதிகாரிகளிடம் உள்ள கைது அதிகாரத்தை ரத்து செய்து, கோர்ட்டின் முன் அனுமதியுடன் மட்டுமே கைது செய்யும் நடைமுறையைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது 1 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு இருந்தாலே குற்றவியல் நடவடிக்கை பாய்கிறது. இதை 5 கோடி ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொருட்களை விற்றவர் வரியைச் செலுத்தத் தவறினால், முறைப்படி வாங்கிய, வணிகர்களின் ஐடிசி சலுகையை ரத்து செய்யும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. வரி ஏய்ப்பு செய்த விநியோகஸ்தரிடமே வசூல் நடத்தப்பட உள்ளது.
வரி பாக்கி 10,000 ரூபாய்க்குக் குறைவாக இருக்கும் வழக்குகளில் நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர்க்க முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேவையற்ற 20 சதவீத வழக்குகள் உடனே முடிவுக்கு வரும்.
பணியாளர்களுக்கு நிறுவனங்கள் எடுக்கும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கு செலுத்தப்படும் 18% ஜிஎஸ்டி.,க்கு இனி ஐடிசி சலுகை வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் கிடைத்தால், வரி செலுத்துவோர் மீதான அதிகாரிகளின் கெடுபிடிகள் வெகுவாகக் குறையும்.
கடந்த 2025ஆம் ஆண்டின் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 56ஆவது கூட்டத்தில், 'ஜிஎஸ்டி 2.0' திட்டத்துக்கான முக்கிய மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் வரி விகிதக் கட்டமைப்பை எளிமையாக்கி, சில குறிப்பிட்ட ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சமூகத்திற்குத் தீங்கிழைக்கக்கூடிய பொருட்களுக்கு (demerit goods) 40 சதவீத சிறப்பு வரி விகிதத்தை அறிமுகப்படுத்தின. இது, அப்பொருட்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட 28 சதவீத வரி மற்றும் இழப்பீட்டு வரி (compensation cess) ஆகியவற்றை மாற்றியமைத்தது.
ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த முக்கியக் கூட்டம் நடைபெறுவதால், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.