
இந்தியாவில் மக்களின் அன்றாட தேவைகளில், மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது டீ, காபி என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்தியாவில் காபி, டீக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தினமும் காலையில் காபி, டீயுடன் அன்றைய தினத்தை தொடங்குபவர்கள் ஏராளம்.
காலையில் வீட்டில் காபி, டீ கிடைக்காத போது பொரும்பாலான மக்கள் நாடிச்செல்வது டீக்கடைகளை தான். இந்தியாவில் ஒவ்வொரு தெரு முனைகளிலும் கண்டிப்பாக டீக்கடைகள் இருந்தே தீரும். அதிகாலை 4 மணிக்கே தொடங்கும் டீக்கடைகள் இரவு 12 மணிவரை இயங்கும் என்பதால் மக்கள் விருப்பப்படும் நேரங்களில் சென்று டீ அருந்தி வருவார்கள்.
அதிலும் தமிழகத்தில் ஏராளமான மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் டீ அல்லது காபியை மட்டுமே காலை உணவாகவே உட்கொண்டு வருகின்றனர் என்பது மறுக்க முடியாத ஒன்று. இந்நிலையில் சென்னையில் டீ 10, 12 ரூபாய்க்கும், காபி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் டீ, காபியின் விலையை உயர்த்துவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து கடந்த 1-ம்தேதி(செப்டம்பர்) முதல் டீ, காபியின் விலை உயர்ந்தது. இது காபி, டீ பிரியர்களை அதிர்ச்சியடையச்செய்தது.
அந்த வகையில் தற்போது காபியின் விலை 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும், டீயின் விலை 10,12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு தமிழகம் முழுவதும் கடந்த 1-ம்தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 3-ம்தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடைமுறை வரும்22-ம்தேதி முதல் வரவுள்ளதால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும்.
அந்த வகையில் காபிக்கு தேவையான வறுத்த சிக்கோரி, எசன்ஸ், மால்ட், ஸ்டார்ச், சர்க்கரை உள்ளிட்டவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டன்ட் டீ, ஐஸ்டு டீ பவுடர் ஆகியவற்றிற்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் டீ, காபியின் விலை குறைய வாய்ப்புள்ள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் உயர்த்தப்பட்ட காபி, டீயின் விலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காபி, டீக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பது உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால் வரும் 22-ம்தேதியில் இருந்து காபி, டீயின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஜிஎஸ்டி மாற்றம், வரி செலுத்தும் வருமான வரம்பிற்கு உட்பட்ட ஓட்டல்களுக்கு மட்டும் பொருந்தும். அதாவது ஓட்டல்களில் விற்கப்படும் டீ, காபியின் விலை குறையுமே தவிர, ரோட்டு கடைகளில், ரோடுகளில் விற்கப்படும் காபி, டீயின் விலை குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.