
இந்தியாவில் மக்கள் டீ, காபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தினமும் காலையில் காபி, டீயுடன் அன்றைய தினத்தை தொடங்குபவர்கள் ஏராளம். ஒரு சிலருக்கு காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக டீ அல்லது காபியை குடிக்கவில்லை என்றால் அன்றைய தினம் நகராது என்பார்கள். அப்படிப்பட்ட டீயும், காபியும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.
காலையில் வீட்டில் காபி, டீ கிடைக்காதவர்கள் நாடிச்செல்வது டீக்கடைகளை தான். இந்தியாவில் ஒவ்வொரு தெரு முனைகளிலும் கண்டிப்பாக டீக்கடைகள் இருந்தே தீரும். அதிகாலை 4 மணிக்கே தொடங்கும் டீக்கடைகள் இரவு 12 மணிவரை இயங்கும் என்பதால் மக்கள் விருப்பப்படும் நேரங்களில் சென்று டீ அருந்தி வருவார்கள்.
அதிலும் தமிழகத்தில் ஏராளமான மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் டீ அல்லது காபியை மட்டுமே காலை உணவாகவே உட்கொண்டு வருகின்றனர் என்பது மறுக்க முடியாத ஒன்று.
தற்போது சென்னையில் டீ 10, 12 ரூபாய்க்கும், காபி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் டீ, காபியின் விலையை உயர்த்துவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது டீ, காபி பிரியர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
அந்த வகையில் 10, 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் டீயில் விலை இன்று முதல் ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் என்றும், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் காபி இன்று முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பால் விலை உயர்வு, காபி தூள், டீ தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். கடைசியாக 2022-ம் ஆண்டு டீயின் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாய்க்கும், காபியின் விலை 12 ரூபாயில் இருந்து 15 ரூபாய்க்கும் விலை உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளுக்கு பிறகு இன்று முதல் தமிழகத்தில் காபி மற்றும் டீயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கப் காபி அல்லது டீயின் விலை இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதன் பிறகு பால் விலை உயர்வு, காபி, டீத்தூள் விலை உயர்வு என அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் டீ மற்றும் காபியின் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ரூபாய், 12 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு கடைசியாக 15 ரூபாயில் வந்து நின்றது. இந்நிலையில் இன்று முதல் டீ 15 ரூபாய்க்கும், ஸ்பெஷல் டீ 20 ரூபாய்க்கும், காபி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பார்சலில் டீ, காபியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கப் டீ 45 ரூபாயும், ஒரு கப் ஸ்பெஷல் டீ 60 ரூபாயும், ஒரு கப் காபி பார்சலுக்கு 60 ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கப் டீ மற்றும் காபியின் விலையை அதிரடியாக சுமார் 5 ரூபாய் வரை விலையை உயர்த்தி இருப்பது சமானிய மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏனெனில் காபி மற்றும் டீயின் விலை உயர்த்தப்பட்டிருப்பது சமானிய மக்களின் அன்றாட செலவில் பெரிய அடியாக விழும். ஏனெனில் நம்நாட்டில் தினமும் 2 முதல் 3 முறைக்கு மேல் காபி, டீ குடிப்பவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்களை இந்த விலை உயர்வு நிச்சயம் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பால் விலை அவ்வளவாக உயராத நிலையில் காபி, டீயின் விலையை உயர்த்தி இருப்பது சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால் விலை உயர்வு குறித்து டீக்கடை விற்பனையாளர்கள் சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.