

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் சிந்தூர் அருகே உள்ள கூடூர் கிராம மக்கள், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் எடுத்துள்ள அதிரடி முடிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது அந்த கிராம மக்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் விற்பனையாளர்கள் கிராமத்திற்குள் நுழைவதற்கு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது.
ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் விற்கும் தரம் குறைந்த மூலப்பொருட்கள் மற்றும் கண்டறியப்படாத ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்களை உட்கொண்ட பிறகு குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சனைகளும், பல்வலியும், செரிமான கோளாறும் ஏற்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, கிராமப் பெரியவர்களும், கிராம மக்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அந்த ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் சுகாதாரமற்றவை என்றும், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்டிருந்தன என்றும் கிராம மக்கள் சந்தேகித்தனர். இதன் காரணமாக, வெளியூர்களில் இருந்து வரும் ஐஸ்கிரீம் வாகனங்கள் கிராமத்திற்குள் நுழையக் கிராம சபை சார்பில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை அறிவிக்கும் வகையில் கிராமத்தின் நுழைவு வாயிலிலேயே எச்சரிக்கை பதாகை(பேனர்) ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் உள்ள தடையை மீறி, ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்காக கிராமத்திற்குள் நுழையும் விற்பனையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகளின் வருங்கால நலனை கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி மட்டுமின்றி அண்மையில் இந்த கிராமத்தின் அருகே மதுக்கடையையும் கிராம மக்கள் ஒன்றிணைந்து அப்புறப்படுத்தியது உட்பட, அப்பகுதியில் எடுக்கப்பட்ட பிற சமூக நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சுகாதார பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
சமூக நலம் சார்ந்த கூடூர் மக்களின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அண்டை கிராமத்தினடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.