‘நான் மட்டும் முதலமைச்சராக இருந்தால்’...முதல்வர் விஜய்யை விமர்சித்த எச்.ராஜா..!!

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜகவின் எச்.ராஜா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
h raja
h rajaimage credit- economictimes.indiatimes.com
Updated on

தமிழக வெற்றிக்கழகம் பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதைப்பற்றி பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜகவின் எச்.ராஜா முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கிறார்.

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடந்துகொண்டு தான் வருகின்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடந்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 14-ம் தேதியன்று கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

இதுபோல பல பெண்களும் குழந்தைகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்து வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கபெண் சிறப்புப்படை சமீபத்தில் தொடங்கப்பட்டாலும் குற்றவாளிகளை உடனடியாக பிடித்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதுபோன்ற குற்றங்களை நடக்காமல் தடுப்பதற்கு அரசு உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

மறுபக்கம் எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சியை சேர்ந்தவர்கள் தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் தொடர்ந்து கேள்வி கேட்டு விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

அதில், புதிதாக வந்துள்ள தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் சில்லுண்டிகளை சேர்த்துக் கொண்டு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள்... வரவேற்கத்தக்க pink patrol திட்டம்... இது உதவிடுமா?
h raja

கடந்த 35 நாட்கள் ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. விஜய் பொறுப்புள்ள முதல்வராக நடந்து கொள்ளவில்லை. தீய சக்தி முதல்வராக விஜய் உள்ளார். அரசியல் அனுபவம் இல்லாதோர் அமைச்சர்களாக உள்ளனர்.

பொறுப்பற்ற, தான்தோன்றித்தனமாக, மக்கள் மீது அக்கறையற்ற அரசாக உள்ளது. ஆட்சியாளர்கள் கற்பனையிலேயே திரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு முழுமையான மக்கள் ஆதரவு இல்லை. ஜூன் 14-ம் தேதியன்று மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுகைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளது.

நான் முதலமைச்சரை கேட்பது ஒன்றே ஒன்று தான். முதலமைச்சருக்கு பொறுப்பு உள்ளதா? ஏன் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று தவெகவை சேர்ந்தவர்கள் பார்க்கவில்லை. மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று விஜய் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இவர்களின் ஆட்சியில் பெண்களும் பெண் குழந்தைகளும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு வருகின்றனர். இதுவே நான் முதலமைச்சராக இருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்.

பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியாத ஒரு பதவி எனக்கு தேவையில்லை என்று சொல்லி இருப்பேன். தவெக ஆட்சி தமிழகத்துக்கு ஒரு துரதிருஷ்டம் என்றார்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

அதேபோல் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி, ‘அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?’ என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

திமுக, பாஜக, அதிமுக என அனைத்து எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களும் முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து வரும் நிலையில் இதற்கு மாறாக, இருதினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, தவெகவிற்கு ஆதரவாக பேசியிருந்தார். அதில், ‘தவெக ஆட்சி அருமையாக உள்ளது. குற்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக எல்லா ஆட்சியிலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல், வன்கொடுமை... பெண்களே! இதில் உங்கள் பங்கு என்ன?
h raja

இது இப்போ நடக்கவில்லை. எல்லாரது ஆட்சியிலும் தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு முந்தியும் நடக்கத் தானே செய்தது’ என்று அவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com