டெல்லி என்.சி.ஆர் பகுதிகளில் அதிவேகமாக H3N2 வைரஸ் பரவி வருகிறது. அப்பகுதி மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டுள்ளனர். சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட சுகாதாரத்துறை அறிக்கையின்படி, டெல்லி NCR நகரங்களில் கடந்த சில மாதங்களுக்குள் குடும்பத்தில் ஒருவராவது H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளது. H3N2 அறிகுறிகளால் நோய்வாய்ப்பட்ட 50-70 சதவீத வீடுகளில், வைரஸின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது இந்த வைரஸினால் தொற்றுக்கு ஆளானவர்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் போக்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்களாக இருக்கின்றனர். இந்த வைரஸ் அதிகரிப்பிற்கு இன்ஃப்ளூயன்ஸா நோய் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுவாசக் கோளறுகள், நீண்ட கால காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
டெல்லி மாநிலத்தில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த 11,000 பேரிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு டெல்லி, குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் காஜியாபாத் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு நடத்தப்பட்ட பல வீடுகளில் வீட்டுக்கு ஒரு நபராவது உடல்நிலை சரியில்லாமல் இருமல், காய்ச்சல், மூச்சு விட சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். இந்த அறிகுறிகள் இந்த ஆண்டு மார்ச் முதல் தொடர்ச்சியாக அதிகரிக்கும் போக்கை கொண்டிருந்தது. ஆய்வு நடத்தப்பட்ட 54% குடும்பங்களில் உடல்நிலை சார்ந்த புகார்கள் பெறப்பட்டது.
H3N2 வைரஸ் என்றால் என்ன? (What is the H3N2 virus)
H3N2 வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் துணை வைராஸாகும். இது வகை -3H , வகை -2N ஆகியவற்றை சேர்ந்தது. இது பருவகாலத்தில் பரவும் காய்ச்சலாக இருக்கிறது. இது மனிதர்களுக்கு உருமாற்றம் அடைந்ததும் அதன் தீவிரத்தை காட்டுகிறது. இந்த வைரஸ் முதலில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை தாக்குகிறது. இது குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஆஸ்துமா, இருதய நோய், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை கடுமையான அபாயங்களுக்கு உட்படுத்துகிறது.
H3N2 வைரஸின் அறிகுறிகள் (Symptoms of H3N2 Virus)
உடல் வெப்பம் 38 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருத்தல் 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் தொண்டை வலி, உடல் சோர்வு, சளி, இருமல், உடல் வலி, தசை வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மேலும் காய்ச்சலின் சில பொதுவான அறிகுறிகள் தென்படும்.
H3N2 வைரஸின் விளைவுகள் (H3N2 Virus Effects)
இந்த வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து மூச்சுக் குழாய் அழற்சி போன்ற கடுமையான சுவாச நோய்களை உருவாக்குகிறது. நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக் கோளாறுகளையும் உருவாக்குகிறது. இந்த வைரஸ் குழந்தைகள், பெரியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை அதிகளவில் தாக்குகிறது. இந்த நோயின் வீரியம் ஆஸ்துமா, இதய நோய், நீரிழிவு நோய் அல்லது நுரையீரல் கோளாறுகள் உள்ளவர்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
H3N2 வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?(How to protect from H3N2 Virus)
1. உங்களின் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருங்கள்.
2. வெளியில் சென்று வந்ததும் கை, கால்களை நன்றாக கழுவுங்கள், மேலும் சானிட்டைசர்களை வெளியில் செல்லும் போது உபயோகிக்கவும்.
3. பொது இடங்களில் முகக்கவசம் பயன்படுத்தவும்.
4. ஒவ்வொரு வருடமும் தவறாமல் தடுப்பூசி போடவும்.
5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தவறாமல் சாப்பிடவும்.
6. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும்.
7. நோயின் தாக்கம் அதிகம் இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)