
பொதுவாக வைட்டமின் டி(Vitamin D) ஆனது சூரிய ஒளியிலிருந்து நேரடியாக உடலுக்கு கிடைக்கிறது. இயற்கையான வைட்டமின் டி சருமத்தின் மூலமாக உடலுக்குள் குறிப்பிட்ட அளவு மட்டுமே செல்லும் இதனால் பாதிப்புகள் ஏதும் இல்லை. அதே நேரம் சில சமயங்களில் சிலருக்கு விட்டமின் டி குறைபாடு காரணத்தினால் எலும்பு முறிவு, மூட்டு வலி போன்ற சில நோய்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. அதற்காக மருத்துவர்கள் குறிப்பிட்ட காலம் வரை வைட்டமின் டி (Vitamin D) எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்வார்கள்.
வைட்டமின் டி ஐ குறிப்பிட்ட காலம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தொடர்ச்சியாக வைட்டமின் டி(Vitamin D) சப்ளிமென்ட்களை சாப்பிடுபவர்களாக இருந்தால், அதன் செயல்பாடுகள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். வைட்டமின் டி அதிகளவில் உடலில் சேர்ந்தால் 'ஹைப்பர் வைட்டமினோசிஸ் டி' என்ற ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது.
இது ஒரு அரிய வகை நிலை தான். இது ஒருவர் அதிகமாக வைட்டமின் டி உட்கொள்ளும் போது ஏற்படுகிறது. மருந்துகள் மூலம் பெறப்படும் வைட்டமின் டி தேவைக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் கால்சியமாக சேர்ந்து 'ஹைபர்கால்சீமியா' நிலையை ஏற்படுத்தும். இந்த நிலை இதயம் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும்.
வைட்டமின் டி (Vitamin D) நச்சுத்தன்மை:
உணவு அல்லது சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் வைட்டமின் டி, அதிகளவு உற்பத்தி செய்யாமல் சரியான அளவிலே நிறுத்தப்படும். பொதுவாக மற்ற அதிகப்படியான வைட்டமின்கள் சிறுநீர் வழியே வெளியேறி விடும். ஆனால், வைட்டமின் டி கொழுப்பில் கரையக் கூடியது என்பதால் அது கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. அதிக அளவு சப்ளிமெண்ட்களை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்வதால் வைட்டமின் டி நச்சுத்தன்மை ஏற்படுகிறது. ஒருவரின் இரத்தத்தில் 150 ng/mL அளவை வைட்டமின் டி தாண்டும் போது நச்சுத்தன்மை அதிகரிக்கிறது. இரத்தத்தில் வைட்டமின் டி சுமார் 20–50 ng/mL அளவில் இருக்க வேண்டும்.
வைட்டமின் டி (Vitamin D) பாதிப்புகள்:
வைட்டமின் டி யின் அதிகரிப்பு எலும்புகள் மற்றும் ரத்தத்தில் கால்சியத்தை அதிக அளவு சேர்க்கின்றன. இதனால் உடலில் கால்சியம் அளவு அதிகரித்து 'ஹைபர்கால்சீமியா நோய்' ஏற்படுகிறது. இந்தக் கால்சியம் சிறுநீரகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும், சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும், அதிக கால்சியத்தினால் சிறுநீரகம் வடிகட்ட முடியாமல் திணற தொடங்கும். இது பல சிறுநீரக நோய் ஏற்பட காரணமாக அமைகிறது. இது மோசமான சந்தர்ப்பங்களில் சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாக அமையும்.
ஹைபர்கால்சீமியா இதயத்தின் பக்க சுவர்கள் மற்றும், இரத்த நாளங்களில் கால்சியத்தை சேர்க்கும். இவை இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மோசமான சந்தர்ப்பத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
சில முக்கிய அறிகுறிகள்:
வைட்டமின் டி அதிகரிப்பை சில எச்சரிக்கைகள் மூலம் உடல் உணர்த்தும். எடை இழப்பு, எரிச்சல், குழப்பம், பலவீனம், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படலாம். உடல் சிறுநீர் மூலம் வைட்டமின் டி யை வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த முயற்சியின் போது அடிக்கடி தாகம் எடுப்பது, வாய் வறண்டு போதல், அதிகப்படியான சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை ஏற்படும். இதய துடிப்பு அதிகரிப்பு , தலைவலி போன்ற விளைவுகளும் ஏற்படும்.
பாதிப்பில் இருந்து விடுபட...
மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டும் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)