இந்தியாவின் முக்கிய கோடை வாசஸ்தலமான காஷ்மீர் யூனியன் பிரதேசம் கடுமையான உறைபனியில் உறைந்து போயுள்ளது. பிரதேசம் எங்கும் வெப்பநிலை கடுமையாக சரிந்து மைனஸ் நிலையில் உள்ளது. இதனால் எங்கும் பனி உறைந்து உள்ளது. பனியால் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் உறைந்து நடைபாதைகள் போல மாறியுள்ளது. குழாய்களில் வரும் தண்ணீர்அனைத்தும் உறைந்துள்ளது. இதனால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
வீட்டின் மேற்கூரைகள் அனைத்தும் பனியால் சூழப்பட்டுள்ளன. பெரும்பாலான வீடுகளில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட முடியாத அளவுக்கு வாசல்களில் பனி உறைந்து உள்ளது. வாகனங்கள் முழுக்கவும் பனியினால் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் நெருப்பு காய்கின்றனர் .
கோகர்நாக் உறைந்துள்ளது:
டிச.25 இரவு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை -7 °C டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவே அதற்கு முதல் நாள் டிச.24 அன்று -7.3°C ஆக இன்னும் குறைந்துள்ளது. இதே நாளில் குல்மார்க்கில் -6°C பதிவானது, பஹல்காமில் -8.6°C ஆக இன்னும் குறைந்தது. இதற்கு எல்லாம் தாண்டி கோகர் நாக்கில் -9°C அளவில் உறைந்து போனது.
காஷ்மீர் பிரதேசத்தில் இந்த கடுமையான பனிப்பொழிவை மூன்றாக பிரிக்கின்றனர். டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து கடுமையான பனி ஆரம்பிக்கிறது. அதிலிருந்து தொடர்ச்சியான 40 நாட்கள் கடுமையான பனிப்பொழிவு காலக்கட்டமாகும். இந்த பனிப்பொழிவு காலத்தில் வெப்பநிலை கடுமையான விழ்ச்சியில் இருக்கும். இந்த காலத்தில் வெயிலை பார்ப்பது அரிதாக இருக்கும். மதிய வேளையில் இருந்தே பனிப்பொழிவு துவங்கிய இரவு நேரங்களில் மிகவும் கடுமையான சூழலை உருவாக்குகிறது.
ஜனவரி 30 தேதியில் இருந்து கடுமையான உறை பனி குறையத் தொடங்கும். அதன் பின்னர் 20 நாட்கள் மிதமான உறைபனி பிரதேசத்தில் காணப்படும். அடுத்த 10 நாட்கள் லேசான பனி நிலவும். பின்னர் படிப்படியாக இந்த பனிப்பொழிவு குறைந்து இயல்பான குளிர் நிலைக்கு காஷ்மீர் பிரதேசம் வரும்.
புத்தாண்டு வானிலை :
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை கடுமையான பனிப் பொழிவுகள் வானிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலைத் துறை அறிவித்துள்ளது. பின்னர் டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வானிலை பெரும்பாலும் வறண்டு இருக்கும்.
இந்த புத்தாண்டில் அதிக உயரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் 4 வரை லேசான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தாண்டில் காஷ்மீருக்கு செல்ல திட்டமிடுபவர்கள் பனிப்பொழிவு கண்டு மகிழலாம்.