
39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ பின்லாந்தில் எடுத்த குடும்பத்தினருடனான அழகிய தருணங்கள் மற்றும் 'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பை தனது யூடியூப் மற்றும் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு 10 நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிறிஸ்துமஸ் விடுமுறையை ஃபின்லாந்தின் லாப்லாண்டில் உள்ள பனி மலைகளில் குடும்பத்தினருடன் சிறப்பு விடுமுறையாக அனுபவித்து வருகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ பனியால் சூழப்பட்ட ஒரு சிறிய குளத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் உறைபனியைத் தாங்கிக்கொண்டு குளித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோ விரைவில் வைரலானது, ஒரே நாளில் 223 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
வீடியோவில், ரொனால்டோ, மேலாடை இன்றி வெறும் நீச்சல் டிரங்கை (swimming trunks) மட்டுமே அணிந்து, பனி மூடிய மலைகளின் முன் நின்று, "நண்பர்களே, இந்த அனுபவத்தைப் பாருங்கள். உறைபனி, மைனஸ் 20," என்று அவர் தண்ணீருக்கு சைகை காட்டுகிறார். "இப்போது எனக்கு முன்னால் என்ன இருக்கிறது? குளிர்!" என்று சொல்லிக்கொண்டே மெதுவாக ஒரு ஏணி மூலம் பனிக்கட்டி நீரின் உள்ளே இறங்குகிறார். பின்னர் அந்த பனிக்கட்டி நீரில் மூழ்கி, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் ஆன்லைன் பார்வையாளர்களையும் தனது கடுமையான குளிரைத் தாங்கும் திறனை காட்டி ஆச்சரியப்பட வைத்துள்ளார். சில நிமிடங்கள் அந்த குளிர்ந்த உறை பனி நீரில் இருக்கிறார்.
சில நிமிடங்கள் கழித்து அவர் குளிர்ந்த நீரில் இருந்து வெளியேறி "மிகவும் அருமை" என்று அவர் உற்சாகமாக சொல்லிக்கொண்டே வருவது போலவும், அந்த உறைபனியில் வெறுங்காலுடன் நடந்து செல்லும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
ரொனால்டோவைப் பொறுத்தவரை, அவர் பனியில் குளிப்பது இது முதல் முறை அல்ல; பல முறை, உடற்பயிற்சி தொடர்பான தனது சமூக ஊடகங்களில் இதுபோன்ற செயல்கள் செய்வதைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அமைதி மற்றும் சாகச மனப்பான்மையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் இந்த சாகசத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
"உங்களால் மட்டுமே அதை எளிதாக்க முடியும்" என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "நாங்கள் அவரை GOAT என்று அழைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது" என்று எழுதினார்.
அதிர்ச்சியடைந்த பார்வையாளர் ஒருவர், "Ice cold water! How? This is so crazy, love it'' என்று குறிப்பிட்டார்.
ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசீர் அணிக்காக விளையாடி வருகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் 900 கோல்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.