
மொபைல் போன், டிவி, ஏசி மற்றும் வாஷிங்மெஷின் உள்பட பல மின்னணு சாதனங்களை மாதத் தவணையில் வாங்குவோரின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆன்லைன் விற்பனை தளங்கள் தான். முன்பெல்லாம் நேரடியாக கடைகளில் சென்று மின்னணு சாதனங்களை வாங்கினாலும், மாதத் தவணையில் வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் சலுகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களை கவர்கின்றனர். இதனால் பலரும் கையில் பணமில்லை என்றாலும் மாதத் தவணையில் மொபைல் போனை வாங்கி விடுகின்றனர். இந்நிலையில் மாதத் தவணையில் மொபைல் போன் வாங்கி, கடனைத் திருப்பி செலுத்தவில்லை எனில், இனி மொபைல் போன் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலர் மொபைல் போனை மாதத் தவணையில் வாங்கி விட்டு, தவணையை சரியாக செலுத்தாமல் இருப்பதால், விற்பனை மையங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் மாதத் தவணை செலுத்தாத மொபைல் போனை முடக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி விரைவில் சம்மதம் தெரிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் போன், டிவி மற்றும் ஏசி உள்ளிட்ட மின்னணு பொருட்களை மூன்றில் ஒரு பங்கு வாடிக்கையாளர்கள் மாதத் தவணை முறையில் வாங்குவதாக ‘ஹோம் கிரெடிட் பைனான்ஸ்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக மொபைல் போன்கள் தான் மாதத் தவணை முறையில் அதிகம் வாங்கப்படுகின்றன.
விலை அதிகமான மொபைல் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சிலர், மாதத் தவணையை சரியாக திருப்பிச் செலுத்தாத நிலையில், மொபைல் போன்களை முடக்குவதற்கான அனுமதியை நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மாதத் தவணையில் வாங்கப்படும் மொபைல் போனில், நீக்க முடியாத ஒரு செயலியை இடம்பெறச் செய்வார்கள். மாதத் தவணையை சரியாக செலுத்தினால், இந்தச் செயலியால் எந்த பாதிப்பும் நேராது. ஆனால் மாதத் தவணையை கட்டத் தவறினால் இந்த செயலி மூலமாக மொபைல் போனை எளிதில் முடக்கி விட முடியும் என நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இப்படிச் செய்தால் மாதத் தவணையை அனைவரும் ஒழுங்காக திருப்பிச் செலுத்துவார்கள். அதோடு வாடிக்கையாளர்களின் நிதி ஒழுக்கமும் மேம்படும் என நிதி நிறுவனங்கள் மற்றும் விற்பனை மையங்களின் சார்பாக ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடப்பட்டது. இதற்கு விரைவில் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளது. இருப்பினும் மொபைல் போனின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.