

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், பூச்சிகளிடமிருந்து பயறு வகைகளைப் பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையிலிருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்ததால், 4 மற்றும் 6 வயதுடைய இரண்டு சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லேஷ் தேபேகரின் மகள்களான ஆரோஹி தேபேகர் மற்றும் அவரது தங்கை ஆராத்யா தேபேகர் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர். சம்பம் நடந்த அன்று (ஆகஸ்ட் 6) காலை அந்தச் சகோதரிகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
பூச்சிகளிடமிருந்து உணவுப் பொருளைப் பாதுகாப்பதற்காக, பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட கொண்டைக்கடலை வைக்கப்பட்டிருந்த அறையில் அந்தக் குடும்பம் உறங்கிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்ததால், பூச்சிக்கொல்லி மருந்திலிருந்து வெளியான நச்சுப் புகை அந்தக் குடும்பத்தைப் பாதித்ததாகத் தெரிகிறது.
குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் இரவில் வாந்தி எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த நச்சு இரசாயனத்தை சிறுமிகளின் உடலால் தாங்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராம மக்கள் முன்னிலையில் சகோதரிகளின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாகவும், மரணங்களுக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரசாயன நச்சின் வீரியத்தைத் தாங்க முடியாமல் இரு சிறுமிகளும் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சிறுமிகளின் மரணம் கிராமத்தில் மீளாத்துயத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் பூச்சிக்கொல்லி மருந்து பற்றிய விழிப்புணர்வையும் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக பயிர்களுக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், களைகள் மற்றும் நோய்களைக் கொல்லவோ அல்லது விரட்டவோ பயன்படும் இயற்கை அல்லது செயற்கை வேதியியல் பொருட்கள் தான் பூச்சிக்கொல்லிகளாக அறியப்படுகிறது. இது வேளாண்மைத் துறையில் பயிர்களைப் பாதுகாத்து விளைச்சலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
இதிலும் சில வகைகள் உள்ளன. குறிப்பாக பூச்சிக்கொல்லிகள் (Insecticides): பயிர்களைச் சேதப்படுத்தும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கிறது.
களைக்கொல்லிகள் (Herbicides): பயிர்களுடன் சேர்ந்து வளரும் தேவையற்ற புல் மற்றும் செடிகளை அழிக்கிறது.
பூஞ்சைக் கொல்லிகள் (Fungicides): பயிர்களைத் தாக்கும் பூஞ்சைத் தொற்றுகளைத் தடுக்கிறது.
உயிர் பூச்சிக்கொல்லிகள் (Biopesticides) எனப்படுபவை பாக்டீரியா மற்றும் தாவரங்கள் போன்ற இயற்கையான மூலங்களிலிருந்து பெறப்படுபவையாகும்.
பூச்சிக்கொல்லிகள் பயிர் நாசத்தைத் தடுத்து விவசாயத்தில் விளைச்சலை அதிகரிக்கிறது. எனினும் இதன் அதிகப்படியான பயன்பாடு நிலத்தடி நீரை மாசுபடுத்துவதுடன், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையுடன் இதை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவினாலும், அதிக அளவில் அல்லது நீண்ட கால பயன்பாடு மனிதரின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். தலைவலி, தலைச்சுற்றல், நடுக்கம், நினைவாற்றல்/கவனக்குறைவு போன்ற நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படலாம்.
சில பூச்சிக்கொல்லிகளை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல், இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதிக அளவு உட்கொண்டால் திடீர் விஷத்தன்மையுடன் வாந்தி, வயிற்றுவலி, அதிக வியர்வை, உமிழ்நீர் அதிகரித்தல், மயக்கம் போன்ற கேடுகள் ஏற்படலாம்.
குறிப்பாக சில குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளுக்கு நீண்டகால வெளிப்பாடு சில புற்றுநோய்கள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் இனப்பெருக்கப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பூச்சிக்கொல்லிகளில் உள்ள சில ரசாயனங்களின் அதிக வெளிப்பாடு கருவின் வளர்ச்சி மற்றும் குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.
எதிர்பாராத விதமாக பூச்சிக்கொல்லி மருந்துடன் நேரடியாக தொடர்பு ஏற்பட்டால் எரிச்சல், அரிப்பு, சிவத்தல் அல்லது கண் பாதிப்பு ஏற்படலாம்.
பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது தோல்/மூச்சு வழியாக, ரசாயனங்கள் சரியாக கழுவப்படாத உணவுகள் மூலம், அல்லது தவறான சேமிப்பால் வீட்டில் ஏற்படும் கசிவு மூலம் பாதிப்பு ஏற்படலாம்.
பூச்சிக்கொல்லியின் ஆபத்து , அதன் வீரியம், வகை, அளவு, வெளிப்பட்ட காலம் மற்றும் உடலில் சென்ற வழி ஆகியவற்றைப் பொறுத்தது. எனவே “பூச்சிக்கொல்லி” என்றாலே அனைத்தும் ஒரே அளவு ஆபத்தானவை என்று கூற முடியாது.
இருப்பினும் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ள இந்த வேதனையான சம்பவத்தில் அவர்கள் என்ன மாதிரியான பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தியதால் சிறுமிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.
விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தும் போது தகுந்த பாதுகாப்புகளை பின்பற்றுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.