அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமே பல நாடுகளில் காலநிலை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்து வருகிறது. எப்போதும் கடுமையாக வெயில் அடிக்கும் பகுதிகளில் மழையும், மழை பெய்யும் பகுதிகளில் வெய்யிலும் என சீரற்ற காலநிலை இருந்து வருகிறது. பாலைவனத்தில்கூட மழை நீர் தேங்கியிருந்தது. இதற்கு காரணம் எல் நினோ நிகழ்வு என்று கூறப்படுகிறது.
அதேபோல்தான் இந்தியாவிலும் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான குளிர் அலைகள் தோன்றும் என்று சொல்லப்பட்டது. இது வரும் பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி வட மாநிலங்களில் கடுமையான குளிர் அலை இருந்து வருகிறது.
சமீபத்தில்தான் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதாவது இந்தியாவில் கடந்த ஆண்டுதான் 124 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் இருந்திருக்கிறதாம்.
அதேபோல் கொடைக்கானலில் இப்போது உறைப்பனி காணப்பட்டது.
இதேபோல்தான் உலகம் முழுவதும் சமநிலையற்ற காலநிலை இருந்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா, இலினோயிஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது பனிப்புயல்.
இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சாலை, ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் மேரிலெண்ட் மாகாணத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பனிப்புயலால் 1 ஆயிரத்து 400க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டன.
இந்த பனிப்புயல் தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல் கனடாவில், நாட்டின் பெரும்பகுதியில் காற்று மிகவும் குளிர்ச்சியாக வீசுகிறது. அங்கும் கடும் பனி நீடித்து வருகிறது. மானிடோபாவில் காற்று குளிர்ச்சியானது வெப்பநிலை -40 ° C ஆகக் குறையும் என்றே எச்சரிக்கப்படுகிறது.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ரியான் மாவ் கூறுகையில், “பல ஆண்டுகள் காணாத ஒன்றாக, பேரழிவை கொடுக்கும் விதமாக இந்த கடுமையான பனிப்புயல் வீசுகிறது.” என்று கூறியுள்ளார்.