

இந்தியாவில் ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு மாநில மற்றும் மத்திய அரசு சார்பில் பல்வேறு சலுகைகளும், போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை இந்தியாவின் பல மாநிலங்களில் பக்தர்கள் ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு பேருந்து சேவையும், ரயில் சேவையும் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக ஹெலிகாப்டர் சேவையும் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ம
மத்திய பிரதேச மாநிலத்தில் பக்தர்களின் வசதிக்காக ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு இன்று ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி வைத்தது அம்மாநிலஅரசு. பக்தர்களின் பயண நேரத்தைக் குறைக்கவும், கடினமான இடங்களுக்குச் செல்லவும் ஹெலிகாப்டர் சேவை உதவுகிறது.
தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவையை வழங்க தமிழக அரசு பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்தாலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும் சில தனியார் நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்களில் பயணிக்க டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால், ஹெலிகாப்டர் சேவையை பொது போக்குவரத்தாக வழங்கினால், சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பக்தர்களின் வசதிக்காக ஆன்மீக சுற்றுலா செல்ல ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கியுள்ளது மாநில அரசு. பக்தர்களின் வசதிக்காக மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினிலிருந்து, ஓம்காரேஷ்வர் வரை ஹெலிகாப்டர் சேவை இயக்கப்படுகிறது. ஏற்கனவே உத்தரகாண்டில் இருக்கும் கேதார்நாத், அமர்நாத், மற்றும் சார்தாம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு தனியார் நிறுவன ஹெலிகாப்டர் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி தலத்திற்கு பொது ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உஜ்ஜயினி மற்றும் ஓம்காரேஷ்வர் இடையே ‘பிஎம் ஸ்ரீ ஹெலி டூரிசம் சர்வீஸ்’ என்ற ஆன்மீக ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது பக்தர்களுக்கு ஒரே நாளில் 2 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்க உதவும்.
இந்தப் பயணத்தில் உஜ்ஜயினி முதல் இந்தூர் வரை செல்ல ரூ.5,000 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பயண நேரம் வெறும் 20 நிமிடங்களே ஆகும். அதேபோல் உஜ்ஜயினி முதல் ஓம்காரேஷ்வர் வரை செல்ல ரூ.6,500 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பயண நேரம் 40 நிமிடங்களாகும்.
மேலும் இந்தூர் முதல் ஓம்காரேஷ்வர் வரை பயணிக்க ரூ.5,500 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சுற்றுலாத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.