
நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு சிறப்பான ஒன்றாக இருக்கும் என சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதற்கேற்ப மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்து பொதுமக்களுக்கு நற்செய்தியை வெளியிட்டது. இதனால் நாட்டில் பல பொருட்களின் விலை குறைந்தது. ஆட்டோமொபைல்ஸ் துறையில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களின் விலையும் குறைந்தது. வாகனங்களின் விலை குறைந்ததால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கார்களின் விலையைக் காட்டிலும், இருசக்கர வாகனங்களின் விலைக் குறைப்பு நடுத்தர மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் டிவிஎஸ், பஜாஜ் மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்ததால், வரிக் குறைப்பின் முழுப் பலனும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருசக்கர வாகன நிறுவனங்கள் விலைக் குறைப்பு முடிவை எடுத்துள்ளன. இதன்படி இருசக்கர வாகனங்களின் விலைக் குறைப்பு வருகின்ற செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
ஏழைகளின் பைக் என நடுத்தர மக்களால் அழைக்கப்படும் ஹீரோ இருசக்கர வாகனத்தின் விலைக் குறைப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஜிஎஸ்டி வரிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை எங்கள் நிறுவனம் உறுதி செயயும். பல்வேறு வகையான ஹீரோ வாகனங்களின் விலை ரூ.15,743 வரை குறையும். இதன்படி ஸ்பெலண்டர் ப்ளஸ், கிளாமர், பிளஷர் பிளஸ் பைக்குகள் மற்றும் எக்ஸ்ட்ரீம் ரக பைக்குகளின் விலைக் குறைப்பு வருகின்ற செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஜிஎஸ்டி வரிக் குறைப்பு மக்களுக்கு பலன் தரக் கூடியது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விலையை 18% முதல் 28% வரை குறைக்கவுள்ளோம். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரியே தொடர்வதால், இவ்வகை வாகனங்களுக்கு விலைக் குறைக்கப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக் குறைப்பால், எங்கள் வாகனங்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். இதன்படி கேடிஎம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை ரூ.20,000 வரையும், மூன்று சக்கர வாகனங்களின் விலை ரூ.24,000 வரையும் குறையும். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஜிஎஸ்டி வரிக் குறைப்பு அமலுக்கு வந்திருப்பது, வாகன விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விலைக் குறைக்கப்பட்ட புதிய விலைகள் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.