இன்சூரன்ஸ் வச்சிருக்கீங்களா? அப்போ கண்டிப்பா படிங்க.. "24 மணி நேர 'இன்-பேஷண்ட்' விதி இனி செல்லாது..!

மருத்துவமனையில் தங்காவிட்டாலும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.
மருத்துவக் காப்பீடு - Health Insurance Tamil
மருத்துவக் காப்பீடு - Health Insurance TamilAI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 

முதுமை என்பது, ஒருவர் இந்தப் பிறவியில் முழுமையாக வாழ்ந்ததற்கான தெளிவான அடையாளம். மனிதனின் இறுதிக் காலத்தில் மும்மூர்த்திகளான பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவையே அவனை ஆட்டிப்படைக்கின்றன. இருந்தாலும் விஞ்ஞானம், அவை மூன்றையும் தள்ளிப்போடும் ஆயுதங்களையும் மனித குலத்திற்கு வழங்கியுள்ளது.

பிணிகளைக் களைந்தாலே மற்ற இரண்டும், அதாவது மூப்பும் சாக்காடும் தாமதப்படும். இந்தப் பிறவியில் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பதுதானே ஒவ்வொருவரின் ஆசையும்! அதனை நிறைவேற்றத்தானே மருத்துவமனைகளும், மருந்துகளும், நலவாழ்வு மையங்களும் என்று உலகே அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆயுளைப் பெருக்கும் அத்தனை உபாயங்களையும் அனைத்து விதமான மருத்துவப் பிரிவுகளும் தங்கள் தங்கள் வழியில் நிறைவேற்றி வருகின்றன. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று பலவித மருத்துவ முறைகள் நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன.

ஒரு பக்கம் வைத்திய முறைகள் என்றால், மறுபக்கம் நலவாழ்வைப் பேணுவதற்கான யோகாசனம், ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, ஜிம், நீச்சல், மலையேறுதல், பனிச்சறுக்கு, மாரத்தான் ஓட்டங்கள் என்று பலப்பல பயிற்சிகளை மக்கள் அன்றாடம் அனுசரித்து வருகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் உரிய பலன்களை வழங்குகிறதா என்று கேட்டால், "ஆம்!" என்று முழுமையாகச் சொல்ல முடிவதில்லை. காரணம், உணவுப் பழக்க மாற்றங்களும் உறக்கப் பழக்க மாற்றங்களும்தான் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் இன்சூரன்ஸ் (காப்பீடு) நிறுவனங்கள் பலவும் தோன்றி, பல விதத்திலும் பலவற்றுக்கும் காப்பீடு வழங்கி வருகின்றன. மனித ஆயுளுக்கு, பயிர்களுக்கு, வண்டிகளுக்கு, வீடுகளுக்கு என்று அனைத்துக்குமே காப்பீடு என்ற நிலை உருவாகிவிட்டது. மருத்துவக் காப்பீடுகள் அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பித்துவிட்டன. அரசுகளும், பொது மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்குக் காப்பீடு வழங்கிப் பாதுகாக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பட்டும் வருகிறது

ஓய்வூதியம் பெறுவோரும் முதியோரும், அதிகரித்துவிட்ட மருத்துவச் செலவுகளை எளிதாக ஈடுகட்டுவதற்காக, இன்சூரன்ஸ் எடுத்துப் பாலிசிகளைக் கட்டி வருகிறார்கள். பல மருத்துவக் காப்பீடுகளுக்கு வரிவிலக்குகளும் வழங்கப்பட்டு வருகின்றன. காப்பீட்டுக் கழகங்களும் கோடிகளில் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றன.

மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போர் தங்கள் வண்டிகளுக்குக் காப்பீடு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிலும் 'தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்' மூலம், எதிர்பாராத நிலையில் விபத்து ஏற்படுகையில் பாதிக்கப்பட்டவருக்குப் பயனளிக்கும் விதமாக அது உதவுகிறது.

மருத்துவக் காப்பீட்டில், எந்தெந்த நோய்களுக்குக் காப்பீடு பொருந்துமென்றும், எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சில வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். அதில், இந்நாள் வரை இருந்து வந்த ஒரு நிபந்தனை, மருத்துவமனையில் தங்கி, அதாவது 'இன்-பேஷண்டாக' இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் தொகையைக் கோர (Claim) முடியுமென்பது. இதன் காரணமாகப் பலரால் பல சமயங்களில் காப்பீட்டுத் தொகையை இழக்கும் நிலையும் இருந்து வந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றாலே 'கிளைம்' என்றும், 'அவுட்-பேஷண்டாக' இருந்தால் கிளைம் செய்ய முடியாது என்றும் கூறப்பட்டு வந்தது.

HEALTH INSURANCE CLAIM
HEALTH INSURANCE CLAIM

இந்த சந்தர்ப்பத்தில்தான் கர்நாடக உயர் நீதி மன்றத்திற்கு அவ்வழக்கு வந்தது. அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான திரு பத்மநாப ஷெட்டி,நேஷனல் இன்சூரன்ஸ் கம்பனிக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார்.’தான் நான்காம் கட்ட புரோஸ்டேட் புற்று நோய்(IVth stage Prostate Cancer) பேஷண்ட் என்றும்,மூன்று மாதங்களுக்கு ஒரு முறை,தான் இன்ஜெக்‌ஷன் (Zoladex+Xgeva) எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமென்றும் கூறி,அவ்வாறு

எடுத்துக் கொண்ட ஊசிகளின் செலவுத் தொகையான ரூ 2,85,470/- ஐ க்ளைம் செய்திருக்கிறார்.நேஷனல் இன்சூரன்ஸ் கம்பனியோ,பாலிசிதாரர் 24 மணி நேரமாவது மருத்துவமனையில் தங்கியிருந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் தங்காத காரணத்தால் கோரிய தொகையைத் தர முடியாது என்று கூறி,நிறுத்தி வைத்து விட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் சூரஜ் கோவிந்தராஜ் அடங்கிய அமர்வு,"மருத்துவமனையில் தங்குவது என்பது சிகிச்சையின் ஒரு முறைதானே தவிர, அதுவே சிகிச்சையின் நோக்கமல்ல. நவீன மருத்துவமுறையில், மருத்துவமனையில் தங்காமலேயே பல சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளபோது, மருத்துவமனையில் தங்கவில்லை என்பதை மட்டுமே காரணமாகக் காட்டிக் கிளைமை நிறுத்துவது, காப்பீட்டின் அடிப்படை நோக்கத்தையே தோற்கடிக்கும் செயலாகும்" என்று கூறியதுடன், கோரப்பட்ட தொகையான ரூ. 2,85,470-ஐ 6% வட்டியுடன் சேர்த்து மனுதாரருக்கு வழங்குவதுடன், ரூ. 25,000 இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. மேலும், நோயால் வாடும் முதியவரை (Senior Citizen) மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், ரூ. 50,000 அபராதமும் அந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு சீனியர் சிடிசன்களுக்கான வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசின் ‘இலவச மருத்துவ காப்பீடு’ ரத்து செய்யப்பட்டதா? கார்டை மீட்பதற்கான வழிகள்!
மருத்துவக் காப்பீடு - Health Insurance Tamil
logo
Kalki Online
kalkionline.com