

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தல் வரும் நாளை (ஏப்ரல் 23-ம்தேதி) 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 295 கம்பெனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 7.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரசாரம் நிறைவு செய்யப்பட வேண்டும். அதன்படி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முந்தைய 48 மணி நேரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் மிகத் தீவிரமாகப் பின்பற்றப்படும். வாக்காளர்கள் எவ்விதத் தூண்டுதலுமின்றி சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பதற்காக இந்த 'அமைதி காலம்' கடைபிடிக்கப்படுகிறது.
இக்காலகட்டத்தில், அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதோ, ஊர்வலங்கள் செல்வதோ அல்லது தேர்தல் பிரச்சாரம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதோ தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே நடைமுறைக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் செயல்முறை முழுமையாக நிறைவடையும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23-ந் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126-ன் கீழ், சில விதிமுறைகள் செயலில் இருக்கும். அதாவது வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக உள்ள 48 மணி நேரக் காலத்தில் எந்தப் பிரச்சாரமும் செய்யக்கூடாது.
தேர்தல் விதிமுறையை முன்னிட்டு நேற்று முதல் 23-ந்தேதி வரை (ஏப்ரல் 21 முதல் 23 வரை)மதுக்கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம்.ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் தளம் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
பொதுமக்களை ஈர்க்கம் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பிற கேளிக்கை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அனுமதி இல்லை.
இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
அதேபோல் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்கு சாவடிகளிலிருந்து அழைத்து செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
விடுதிகள் (Hotels), தங்கும் இல்லங்கள் (Lodges) மற்றும் திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய, காவல்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை (Opinion Polls) வெளியிடுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ இந்த நேரத்தில் அனுமதி கிடையாது. இது வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் என்பதால் இந்தத் தடை அமலில் இருக்கும்.
தேர்தல் விதிமுறைகளின்படி, அந்தந்தத் தொகுதியின் வாக்காளர்களாக இல்லாத அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சிக்காரர்கள் அனைவரும் உடனடியாகத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.