

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரங்களிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளன.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக 75,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக முழுவதும் செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த தேர்தலுக்கு பல புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் வரும் தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளில் என்னென்ன புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு வசதி
தேர்தல் நாளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவதால் வாக்குச்சாவடிக்கு வர முடியாத அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறையினரை ‘அத்தியாவசிய பணியில் உள்ள வாக்காளர்கள்’ என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தமுறை போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றுவோர் ‘அத்தியாவசிய பணியில் உள்ள வாக்காளர்கள்’ என அறிவிக்கப்பட்டு தபால் வாக்கு அளிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களின் கலர் போட்டோ
பொதுவாக வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இடையே அவர்களின் புகைப்படம் இடம்பெறுவது வழக்கம் இருந்து வந்தது. ஆனால் இம்முறை வேட்பாளரின் கருப்பு - வெள்ளை புகைப்படத்திற்கு மாற்றாக வண்ணப்புகைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஒரு தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் போட்டியிடும் போது வாக்காளர்களின் சின்னத்தை மட்டும் பார்க்காமல் வேட்பாளரின் முகத்தையும் வைத்து சரியான நபரை அடையாளம் கண்டு ஒட்டுபோட இது உதவும். கருப்பு வெள்ளை புகைப்படங்களை விட வண்ணப்புகைப்படங்கள் தெளிவாக தெரியும் என்பதால் இந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
பசுமை வாக்குச்சாவடி மையங்கள்
வாக்காளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று என்ற அடிப்படையில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில்களில் தோரணங்கள் கட்டப்பட்டு, வெயிலின் தாக்கத்தை தவிர்க்க பந்தல்கள் மற்றும் குளிர்ச்சியான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தேர்தலுக்கும் மாதிரி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த முறை பல மாதிரி வாக்குச்சாவடிகள் ‘பசுமை மையங்களாக’ மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு நெகிழிப்பொருட்கள் தவிர்க்கப்பட்டு, இயற்கை சார்ந்த அலங்காரங்கள் மற்றும் சில இடங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டு பகுதிகள் மற்றும் பாலூட்டும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
செல்போன் வைக்க தனி அறை
பொதுவாக வாக்குச்சாவடிக்குள் செல்போன்களை கொண்டு செல்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால் தொலைத்தூரத்தில் இருந்து வரும் வாக்காளர்கள் தங்களது செல்போன்களை எங்கே வைப்பது என்று தவித்த நிலையில் இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் அதற்கு மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வாக்குச்சாவடியில் ஒப்படைத்துவிட்டு அதற்கு டோக்கம் பெற்றுக்கொள்ளும் வசதி இந்த தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அவர்களது வாக்குப்பதிவு முடிந்ததும் டோக்கனை கொடுத்து செல்போன்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
கியூஆர் கோடு வசதி
இந்த முறை வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை கண்டறிவதிலும், வாக்களிப்பதிலும் நிலவும் சிரமங்களை குறைக்க கியூஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது வாக்காளர் தகவல் சீட்டில் கியூஆர் கோடு வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம், வரிசை எண் மற்றும் பாகம் எண் போன்ற விவரங்களை சில நொடிகளில் தெரிந்து கொள்ள முடியும்.
பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ள தேர்தல் ஆணையம் மக்கள் 100 சதவீதம் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.