

தமிழ்நாட்டில் உள்ள 8,193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் பணிக்கான அறிவிப்பு இன்று (ஜூலை 21) வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு 49(i), 46(i), 46(ii) மற்றும் 46(iii)ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயில்களில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்யக் கூடிய திருக்கோயில்களின் பட்டியல், அறங்காவலர் நியமன அறிவிப்பு மற்றும் நியமன விண்ணப்பம் உள்ளிட்ட முழு தகவல்களையும் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
அறங்காவலர் நியமனத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட திருக்கோயில்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 49(1)ன் படி பட்டியலில் சாராத 8,193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
அறங்காவலர் நியமன அறிவிப்பு, திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். 20.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே 1,012 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறங்காவலர் பணிக்கான தகுதிகள்:
* விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
* எந்தத் திருக்கோயில் அறங்காவலர் பணிக்கு விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கிறாரோ, அக்கோயில் அமைந்துள்ள அதே மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
* விண்ணப்பதாரர் சமூகத்தில் நன்னடத்தையும், நல்ல பெயரும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
* குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவராகவோ அல்லது நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவராகவோ இருக்கக் கூடாது.
* அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் திருக்கோயிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகள் ஏதும் இருக்கக் கூடாது.
* இதற்கு முன்னதாக அறங்காவலர் பதவியில் இருந்து ஒழுங்கீனமான செயல் காரணமாக நீக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆகஸ்ட் 20, மாலை 5:45 வரை.
இன்னும் விண்ணப்ப கால அவகாசம் ஒரு மாதம் வரை இருந்தாலும், தேவையான ஆவணங்களுடன் உடனே விண்ணப்பிப்பது தான் சிறந்தது.
தேவையான ஆவணங்கள்:
* வயது சான்று (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது கல்விச் சான்று நகல்) *
* சாதிச் சான்றிதழ் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும்)
* இருப்பிடச் சான்று
* சொத்து சான்று
* வருமான வரி சான்று
* வழக்கில் தண்டனை பெற்றவர் இல்லை என்பதற்கான காவல்துறை சான்று
* திருக்கோயில் சொத்துக்களை அனுபவிக்கவில்லை என்பதற்கான சான்று