
சமீபத்தில் சென்னையில் ஒருவருக்கு HMPV நோய் தொற்று கண்டறிந்ததில் இருந்து ஒரு புறம் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏற்கனவே கோவிட் பெருந்தொற்றின் பின்விளைவுகளை இன்று வரையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள், இந்த புதிய தொற்று, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடுமோ என்கிற கவலையில் உள்ளனர். சென்னை மாநகரில் அங்காங்கே மக்கள் மெல்ல மெல்ல முகக் கவசத்தை அணிய தொடங்கி விட்டனர்.
இம்முறை லாக் டவுன் போன்று ஏதேனும் வந்து விடக் கூடாது என்று அதன் பாதிப்பு உணர்ந்தவர்கள் கவலை கொள்கின்றனர். கோவிட் பெருந்தொற்று காலத்தில் நோய் பாதிப்பு மட்டுமல்லாது, பொருளாதார பாதிப்பும் உலகம் முழுக்க இருந்தது. பலருக்கு வேலை இழப்பும், சம்பள இழப்பும் ஏற்பட்டது. வியாபாரம் பல மாதங்கள் முடங்கியதால் உண்டாகிய தனி மனித பொருளாதார சரிவுகளை இன்னும் பலர் கடக்காமல் உள்ளனர்.
இந்த சூழலில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய HMPV வைரஸ் குறித்த அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியதாவது:
"HMPV வைரஸ் பற்றிய செய்தி தொடங்கியவுடனேயே தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எந்த அறிவுறுத்தல்களும் வழங்கவில்லை. வழக்கமாக நோய் தொற்று காலத்தில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையும், அறிவுறுத்தல்களையும் வழங்கும். அது போல மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகமும் மாநில சுகாதாரத்துறைக்கு எந்த அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை.
இது 50 ஆண்டுகளுக்கு முன்னால் பரவிய வைரஸ் என்பதால் இது குறித்து அச்சம் தேவையில்லை. கோவிட்டை போல உருமாறும் வைரஸ் இது இல்லை என்பதால் அது போன்ற பாதிப்புகளை இது ஏற்படுத்தாது. HMPV வைரஸால் பாதிக்கப்பட்டால், எந்த சிகிச்சையும் இல்லாமல், அது தானாகவே 3-5 நாட்களில் குணமாகி விடும் என்ற நிலையில் தான் இருக்கிறது. இதற்கென தனி சிகிச்சை தேவை இல்லை. தமிழ் நாட்டில் இருவருக்கு HMPV தொற்று இருக்கிறது. சென்னையில் 45 வயதுமிக்க ஒரு நபர் இந்த தொற்றில் பாதிப்பட்டிருந்தாலும் நலமுடன் இருக்கிறார். சேலத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கனவே புற்றுநோய், நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்துள்ளன. இருவரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். எனவே இது குறித்து பதட்டப்பப்பட தேவையில்லை.
சாதாரண காய்ச்சல், இருமல், சளி போன்ற உபாதைகள் உள்ளவர்கள் கூட இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து கொண்டால் அவர்களில் பத்து, இருபது பேரில் ஒருவருக்கு இந்த வைரஸின் தாக்கம் இருக்கலாம். அப்படி இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. இது பதற்றப்பட கூடிய அளவுக்கு வீரியமிக்க ஒரு வைரஸ் அல்ல, வீரியம் குறைந்த வைரஸ் தான். நாம் இது குறித்து கவலைப்படவோ அச்சப்படவோ தேவையில்லை."
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா:
"HMPV என்பது புதிய வைரஸ் அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் யாரும் கவலைப்பட தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் சிறப்பு வார்டை ஏற்படுத்தியுள்ளன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்."
இந்தியாவில் இதுவரை HMPV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மே.வங்கத்தில் 3, மஹாராஷ்டிராவில் 3, தமிழகத்தில் 2 , கர்நாடகாவில் 2, குஜராத்தில் ஒருவருக்கு பாதிப்பு உள்ளது.