
நாக்பூரில் 2 சிறுவர்களுக்கு HMPV தொற்று பாதிப்பு - பாதிப்பு எண்ணிக்கை 7ஆக உயர்வு.
கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கி தவித்த வேளையில், அந்த கொடிய வைரஸ் லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்தது. வாழ்வாதாரத்திலும் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பை மக்கள் மெல்ல மெல்ல மறக்க தொடங்கி தங்களை இயல்பு வாழ்க்கைக்கு தயார்ப்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் HMPV என்ற புதிய தொற்று சமீப நாட்களாக சீனாவை அச்சுறுத்தி வந்தது. இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிய தொடங்கியது. சீனாவில் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் பல்வேறு சுவாச தொற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்று என்று அதிகாரிகள் கூறியுள்ளார். மேலும் சீனாவில் அவசர நிலை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மக்கள் இயல்பாகவே நடமாடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
சீனாவில் HMPV வைரஸ் பரவலால் மற்ற உலக நாடுகளும் தங்கள் நாடுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சீனாவின் HMPV பரவல் செய்தியை நாம் படித்து வந்த நிலையில், HMPV தொற்று சத்தமில்லாமல் இந்தியாவுக்குள்ளும் நுழைந்து விட்டது. பெரும்பாலும் இந்த தொற்று குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மட்டுமே அதிகம் தாக்கி வருகிறது. பெங்களூருவில் 2 குழந்தைகள், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஒரு 2 மாத குழந்தை, சென்னையில் 2 குழந்தைகள் என நாடு முழுவதும் 5 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பாதிப்புக்குள்ளான யாருமே வெளிநாடுகளுக்கு அண்மைகாலத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்பதாகும்.
இந்நிலையில் இதன் பாதிப்பு தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஏற்பட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. அந்த மாநிலத்தின் 2-வது நிர்வாக தலைநகராக கருதப்படும் நாக்பூரிலும் HMPV தொற்று 2 சிறுவர்களை பாதித்து உள்ளது. 7 வயது மற்றும் 14 வயது சிறுவர்கள் 2 பேர் இந்த தொற்று அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
தொற்றை உறுதிப்படுத்த அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் நாக்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் புனேயில் உள்ள தேசிய தொற்றுநோய் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் HMPV தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து இருக்கிறது.
HMPV தொற்று பாதிப்பு 7-ஆக உயர்ந்துள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது வெளியில் மற்றும் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.