

தற்போதுள்ள காலகட்டத்தில் சொந்த வீடு என்பது தான் நடுத்தர, ஏழை குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி பலரின் வாழ்நாள் லட்சியமாகவே உள்ளது. அதற்காகவே பலரும் சிறுசிறுக பணத்தை சேர்த்து வைத்து சொந்தமாக வீடு வாங்குவார்கள். பணம் இல்லாதவர்கள் கடனை வாங்கியாவது சொந்தமாக வீடு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்து விடலாம் என்று நினைப்பர்கள். அவர்களுக்காக எஸ்பிஐ, எல்ஐசி போன்ற அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன.
அந்த வகையில், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில் கடன் வழங்குதல் மிகவும் எளிதாகி விட்டது. அதிலும் குறிப்பாக வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனானது, பல பேருடைய சொந்த வீட்டுக் கனவை நனவாக்கி உள்ளது. தனியார் வங்கிகள் அதிகளவு கடன் தந்தாலும் அதற்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும்.
ஆனால் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கும் போது அங்கு வட்டி குறைவாக இருக்கும். இது இரண்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அது வட்டி தான். ஒருவர் வாங்கிய வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதனை வேறொரு வங்கிக்கு மாற்ற நினைக்கலாம். உங்களின் தற்போதைய வீட்டுக் கடனை, குறைந்த வட்டி விகிதம் வழங்கும் மற்றொரு வங்கிக்கு மாற்றுவதையே 'வீட்டுக் கடன் மறுநிதியளிப்பு' (Refinancing)என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு மாற்றுவதன் மூலம் உங்கள் வீட்டுக்கடனுக்கான மாதத் தவணை குறைவதுடன், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலமும் கணிசமாக குறைந்துவிடும்.
அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு உங்களுடைய வீட்டு கடனை மாற்றம் செய்யும்போது அது நாள் வரை இஎம்ஐ தொகையை சரியான தேதியில் செலுத்தி இருக்கிறீர்களா என்பதை இரண்டு வங்கிகளுமே பார்க்கும். அப்படி சரியான முறையில் நீங்கள் இஎம்ஐ தொகையை செலுத்தி இருந்தால் மட்டுமே புதிய வங்கி உங்களுடைய கடனை மாற்ற ஒப்புதல் தெரிவிக்கும்.
அதாவது நீங்கள் தனியார் வங்கியில் 9.5 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், அதனை பொதுத்துறை வங்கிக்கு மாற்றும் போது 8 சதவீதத்திற்கே கிடைக்கும் என்பதால் உங்களும் பணம் மிச்சமாகும்.
உதாரணமாக நீங்கள் தனியார் வங்கியில் 20 ஆண்டு காலகட்டத்திற்கு 9% வட்டியில் ரூ.60 லட்சம் கடனை வாங்கியிருக்கும் பட்சத்தில் நீங்கள் எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொத்துறை நிதி வங்கிகளுக்கு மாற்றும் போது, வட்டி விகித 8% ஆக குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி குறையும் பட்சத்தில் பழைய EMI: ரூ.46,986 புதிய EMI: ரூ.43,822 மாதச் சேமிப்பு: ரூ.3,164 மொத்த வட்டிச் சேமிப்பு (20 ஆண்டுகளில்) சுமார் ரூ.7.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சேமிக்க முடியும்.
நீங்கள் உங்கள் வங்கிக்கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
* உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் (உதாரணமாக 10+ ஆண்டுகள்) இருந்தால் மட்டுமே இது அதிக லாபம் தரும். கடனை முடிக்க இன்னும் 2-3 ஆண்டுகளே இருந்தால், மாற்றுவது பெரிய பலனை உங்களுக்கு தராது.
* உங்கள் தற்போதைய வீட்டுக்கடனுக்கான வட்டிக்கும், புதிய வட்டிக்கும் இடையே குறைந்தபட்சம் 0.50% முதல் 1% வரை வித்தியாசம் இருந்தால் மட்டுமே உங்கள் வங்கிக்கடனை மாற்றுவது லாபகரமானதாக இருக்கும். அதனால் வங்கிக்கு மாற்றுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசித்து முடிவு செய்வது நல்லது.
* அதாவது உங்களது வீட்டுக்கடனை மாற்றும் போது முக்கியமாக பார்க்க வேண்டியது, கடனைத் திருப்பிச் செலுத்த குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே இது அதிக லாபத்தை அடைய முடியும். கடனை முடிக்க இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளே இருக்கும் பட்சத்தில், மாற்றுவது பெரிய பலனை உங்களுக்கு தராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* அதேநேரம் உங்கள் சிபில் நன்றாக இருந்தால் தான் பொதுத்துறை வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் தரும்.
* புதிய வங்கிக்கு உங்கள் வீட்டுக்கடனை மாற்றும்போது 'Processing Fee', 'Legal charges' போன்ற சில கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்தச் செலவுகளை விட உங்கள் வட்டிச் சேமிப்பு அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போது பிளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு, கடனை அடைக்க அல்லது பிற வங்கிகளில் மாற்ற எந்த அபராதமும் (Foreclosure charges) விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வீட்டுக்கடனை மற்ற வங்கிக்கு மாற்றும் முன்னர், மற்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள், அங்குள்ள இதர கட்டணங்கள், புதிய வங்கிக்கு மாறும்போது ஆகும் மொத்தச் செலவு எவ்வளவு, அதன் மூலம் மிஞ்சும் வட்டி எவ்வளவு என்பதைத் தெளிவாகக் கணக்கிட்டு பாருங்கள். அதன் பின்னர் லாபகரமாக இருந்தால் மட்டுமே மாற்றுவது குறித்து முடிவெடுங்கள்.