

வாகன சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக தற்போது மின்சார வாகனங்கள் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இ-வாகனங்களை உருவாக்குவதிலும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஒரே நேரத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல 10 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம்.
இந்திய இருசக்கர வாகன சந்தையில், இதுவரை இப்படியொரு அறிமுகத்தை வேறு எந்த பைக் நிறுவனமும் செய்ததில்லை. பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட புது மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதே சவாலான காரியமாகும்.
ஏனெனில் அறிமுகமாகும் அனைத்து பைக்குகளுக்கும் வரவேற்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒரே நேரத்தில் 10 பைக்குகளை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது பைக் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தலைமுறை இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப பைக்குகளின் கவர்ச்சியான நிறங்கள் மற்றும் புதுமையான வடிவங்களில் பைக்குகளை உருவாக்கியுள்ளது ஹோண்டா.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய 10 பைக்குகளில் 1 மின்சார வாகனமும் அடங்கும். பெட்ரோலில் இயங்கும் பைக்குகளுக்கு மத்தியில், மின்சார வாகனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஹோண்டா.
ஹோண்டா அறிமுகப்படுத்திய 10 புதிய பைக்குகளில் 7 புதிய மாடல்களும், 3 அப்டேட் செய்யப்பட்ட மாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் சாகசப் பயண மற்றும் பிரீமியம் பைக்குகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய மாடல்களை களத்தில் இறக்கி விட்டுள்ளது ஹோண்டா நிறுவனம்.
7 புதிய மாடல் பைக்குகளின் விவரங்கள்:
*அட்வென்ச்சர் பைக் பிரியர்களுக்கு - Honda ADV 160 மற்றும் Honda CB 500
* ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு - Honda XR 300L மற்றும் Honda XR 300 Rally
* தொலைதூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு - Honda Rebel 300 மற்றும் Honda Rebel 500 க்ரூயிசர் பைக்குகள்
* மின்சார வாகனப் பிரிவில் QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
3 அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள்:
சந்தையில் ஏற்கனவே வெற்றிகரமாக வலம் வரும் Honda CB 350 Range சீரிஸ் பைக்குகளுக்கு கவர்ச்சியான புதிய நிறங்கள் மற்றும் நவீன மயமான கிராபிக்ஸ் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டாவின் 10 புதிய பைக்குகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ‘Make-in-India’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்:
ஹோண்டா இ-கிளட்ச்:
புதிய பைக்குகளின் சில மாடல்களில் E-Clutch தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இது நெரிசலான போக்குவரத்தில் தானாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எத்தனால் எரிபொருள் ஆதரவு:
ADV 160 பைக், அதிகபட்சமாக 85% வரை எத்தனால் கலந்த எரிபொருளை ஆதரிக்கும் நாட்டின் முதல் பைக்காக களமிறங்குகிறது.
அதிக மைலேஜ்:
QC3 எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வியைவான சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ வரை பயணிக்கலாம்.
புதிய பைக்குகளின் விலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சந்தையில் முழுமையாக விற்பனைக்கு வரும் போது தான் பைக்குகளின் விலை தெரிய வரும்.
இந்திய வாகன சந்தையில் தனது இருப்பு மற்றும் ஆதிக்கத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில் ஹோண்டா நிறுவனம் எடுத்துள்ள இந்த மிகப்பெரிய முன்னெடுப்பு, பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது