
உயிருக்கு மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பெரும்பாலும் உயிரைக் குடிக்கும் அபாயம் இந்த நோயில் உள்ளது. அதைவிட இந்த நோய்க்கு ஆகும் மருத்துவ செலவு மிக மிக அதிகமாக உள்ளது. சாதாரண மாநகரங்களில் கூட இந்த நோய்க்கு தகுந்த மருத்துவம் கிடைக்காது. மாநிலத் தலைநகரங்கள் மிகப்பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டுமே இந்த நோய்க்கு சிகிச்சை கிடைக்கிறது. இந்நிலையில் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியதாக ஹாங்காங் கூறுகிறது.
புற்றுநோயைக் குணப்படுத்தும் CAR-T ஊசியை ஹாங்காங் சோதனை செய்துள்ளது. கடந்த நவம்பர் 2024 லிருந்து CAR-T ஊசி மூலம் சிகிச்சை பெற்ற 5 நோயாளிகளும் படிப்படியாக குணமடைந்து வருவதாக ஹாங்காங் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஹாங்காங்கில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களில் குணமடைவதாக கூறுகின்றனர். இந்த நோயாளிகளின் உடல்நிலையும் நன்றாக தேறி வருகிறது. அவர்கள் வலி ஏதும் இன்றி முன்பை விட நன்றாக இருப்பதாக கூறுகின்றனர்.
பிரபல சீன நாளிதழான சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில், இந்த புற்றுநோய் தடுப்பு ஊசி 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹாங்காங்கின் சீன பல்கலைக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகளுக்கு போடப்பட்டது. இந்த நோயாளிகளில் முதலாம் நபருக்கு 73 வயது, இரண்டாம் நபருக்கு 71 வயது , மூன்றாம் நபருக்கு 67 வயது , நான்காவது நபருக்கு 15 வயது , ஐந்தாம் நபருக்கு 5 வயது ஆக இருந்துள்ளது. மூன்று மாதங்கள் கழித்து 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த நோயாளிகள் உடல்நிலையில் முன்னேற்றத்தை கண்டுள்ளனர். இந்த நோயாளிகள் முன்பை விட சிறப்பாக இருக்கின்றனர். இந்த நோயாளிகளின் அனுபவங்களையும் விஞ்ஞானிகள் பதிவு செய்து அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
அதில் ஒரு புற்றுநோய் நோயாளியான லீ சுங் "இந்த தடுப்பூசி போட சில நிமிடங்கள் மட்டுமே ஆனது , பின்னர் சிறிது சிறிதாக நான் நிம்மதியாக உணர ஆரம்பித்தேன். அதன் பின்னர் வலி குறைந்தது. இப்போது வலி இல்லை. நோய் விரைவாக குணமடைந்து வருகிறது. இந்த முன்னேற்றத்திற்குப் பிறகு, CAR-T ஊசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
இந்த புற்றுநோய் தடுப்பு ஊசி போட்ட பிறகு, நோயாளி 7 நாட்கள் ஐசியுவில் வைத்து கண்காணிக்கப்படுவார். அதேசமயம் பக்க விளைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். இந்த CAR -T ஊசி இதுவரை கல்லீரல் அல்லது நுரையீரல் புற்றுநோயில் மட்டுமே பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் இந்த தடுப்பூசி இன்னும் சாதாரண மக்களுக்கு எட்டாத வகையில் உள்ளது. இந்த தடுப்பூசியின் விலை மட்டும் ரூ.3 கோடி ஆகிறது. மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசியை பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த விலை ஹாங்காங் நாட்டில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். மற்ற நாடுகளில் இதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் தடுப்பூசி:
இந்தியாவில் நெக்ஸ்கார்-19 மூலம் நோயாளிகளுக்கு CAR-T சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஊசி. மத்திய அரசு மேட் இன் இந்தியா திட்டம் மூலம் நோயாளிகளுக்கு குறைந்த விலையில் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் தயாரிப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் பொருட்களின் விலையை குறைக்க முடியும்.