

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தர்மேந்திர பிரதான் என்ற பெயரைச் சொல்லித்தான் கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது அது தீவிரமாகியிருக்கிறது.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடந்த 34 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கரப்பான் ஜனதா கட்சியின் சார்பில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முறைகேடுகள், தேசிய தேர்வு முகமையின் குளறுபடிகள் மற்றும் தொடர்ச்சியான வினாத்தாள் கசிவு சம்பவங்களைக் கண்டித்து இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
போலீசார் தடியடி நடத்தியபிறகும் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தரில் கூட்டம் குறையவில்லை. டெல்லியில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக சென்னை, பாட்னா, பெங்களூர், ஹைதராபாத் என இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது.பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இதற்கிடையே இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறித்த வியக்கத்தக்க தகவல் ஒன்று இணைத்தில் வேகமாக பரவி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இன்று நாடு முழுவதும் மாணவர்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் இதே தர்மேந்திர பிரதான் தான், சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு இதே வினாத்தாள் கசிவுப் பிரச்சனைக்காக ஒரு மாணவர் தலைவராக வீதியில் இறங்கிப் போராடினார் என்ற வரலாற்று உண்மை வெளிச்சத்திற்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், கடந்த 1997-ம் ஆண்டு மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த போது, ஒடிசா தலைமை செயலக வாயிலில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக சுமார் 1,500 மாணவர்களைத் திரட்டி பிரமாண்ட போராட்டத்தை நடத்தி இருக்கிறார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு, 1997-ல் எடுக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் பழைய புகைப்படங்களும் செய்திகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
அதாவது, காங்கிரஸ் தலைமையில் ஒடிசாவில் ஜானகி பட்நாயக் தலைமையிலான அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தியிருக்கிறார். அவர்களில் ஒரு இளைஞர்தான் இன்று மத்திய கல்வி மந்திரியாக இருக்கும் தர்மேந்திர பிரதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய கொடூர தடியடியில், தர்மேந்திர பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டு அவருக்குக் கைகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவர்களின் உரிமைகளுக்காகவும், வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ரத்தம் சிந்திப் போராடிய அந்த சம்பவம், அன்று ஒடிசா அரசியலில் அவருக்கு ஒரு மிகச் சிறந்த மாணவர் தலைவர் என்ற அடையாளத்தைப் பெற்றுத் தந்ததுடன் அரசியலில் நுழையவும் காரணமாக இருந்தது.
அன்று வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்களின் உரிமைக்காக ரத்தம் சிந்திப் போராடிய ஒருவர், இன்று நாட்டின் கல்வித் துறைக்கே தலைமை தாங்கும் போது அதே வினாத்தாள் கசிவு புகார்களைத் தடுக்க முடியாமல், மாணவர்களின் குரலை நசுக்க நினைப்பதும் வரலாற்று முரண் என சமூக ஆர்வலர்களும் மாணவர் அமைப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தன்னுடைய 18 வயதில் மாணவர் அமைப்பில் புகுந்து, படிப்படியாக உயர்ந்து இன்று மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தர்மேந்திர பிரதானுக்குக் காலம் ஒரு விசித்திரமான சுழற்சியை அமைத்துக் கொடுத்துள்ளது. அன்று கேள்விகளை எழுப்பியவர், இன்று பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் நிற்கிறார். இது அவருக்குக் கிடைத்த வாய்ப்பு மட்டுமல்ல; மிகப்பெரிய பரீட்சையும்கூட..
அதிகாரத்தைக் கேள்வி கேட்கும்போது இருந்த அதே தீவிரமும் நியாயமும், அதே அதிகாரத்திற்கு வரும்போது கைநழுவிப்போவது, ஒரே மனிதனை வரலாற்றின் இருவேறு பரிமாணங்களில் நிறுத்தியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.