தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதுப்பிக்க சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடத்தப்படுகின்றன. இந்த திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா, தேவையற்ற பெயர்கள் உள்ளனவா, புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர வேண்டுமா என்பதெல்லாம் கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணி தற்போது முழுமூச்சில் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் அலுவலகர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை கொடுத்து, வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வருகின்ற டிசம்பர் 4-ம் தேதியுடன் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் பணிகள் முடிவடைய உள்ளதால், 68,467 அலுவலகர்கள் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 1-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒரு மாதத்துக்குள் 6.34 கோடி வாக்காளர்கள் விவரங்களை எப்படி நேரில் சென்று சரி பார்க்க முடியும்? ஏற்கனவே ஒரு மாதம் காலம் என்பது மிகவும் குறைவு என்றும், அவசர அவசரமாக எப்படி செய்ய முடியும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் அவசர கதியில் பணியினை மேற்கொண்டால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றன. அதேநேரம் இன்னும் பல பகுதிகளில் கணக்கீட்டு விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான, அதாவது 78.09% படிவங்கள் வாக்காளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் படிவங்களை நிரப்புவதற்கு 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேவை என்பதால், பொதுமக்கள் இப்படிவங்களை நிரப்புவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அதாவது பல இடங்களில் இந்த படிவத்தை எப்படி நிரப்புவது என்பது குறித்து எந்த விதமான ஆலோசனைகளையும் தேர்தல் அலுவலகர்கள் சரிவர வழங்காததால் பலரும் படிவத்தை தவறாக நிரப்பி விட்டு என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் தவறாக நிரப்பப்பட்ட SIR படிவங்களை புதியவையாக மாற்ற முடியுமா என்று பலரும் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் SIR தொடர்பாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, நவம்பர் 13-ம் தேதி வரை, கிட்டத்தட்ட 21 லட்சம் வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அதிகாரிகள் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 படிவங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்த 2 படிவங்களில் ஒன்று கிழிந்துவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ புதிய படிவங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர். வாக்காளர்கள் SIR படிவங்களில் அடித்தல், திருத்தங்கள் போன்ற தவறுகள் செய்திருந்தாலும் அவை ஏற்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது தவறாக குறிப்பிட்ட தகவல்களை அடித்து திருத்தி, மேலாக சரியான விவரங்களைச் சேர்க்கலாம் என்றும், SIR படிவத்தில் தவறாக எழுதப்பட்ட இடங்களை மறைக்க whitener பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.
வேலைக்கு செல்பவர்கள், வீடுதோறும் வழங்கப்படும் SIR படிவங்களை பெற முடியாதவர்கள் https://www.voters.ecl.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப் போக வேண்டியது அவசியம். மேலும் வாக்காளர் அட்டையில் மொபைல் எண்ணைப் பதிவு செய்திருந்தால் மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.