
நவீன கால கிரிக்கெட்டில் ரன் மெஷினாக செயல்பட்டு வந்த விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார். ரன் குவிப்புக்கு வேகத்தடை போட்டது போல் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வை அறிவித்து விட்டார். இந்திய அணியில் ஃபிட்டான வீரர் என்றால் உடனே பலரும் குறிப்பிடுவது விராட் கோலியைத் தான். அப்படி இருக்கையில் கோலியின் ஓய்வு முடிவு அனைவருக்குமே வருத்தம் தான்.
இந்திய அணிக்காக விராட் கோலி அனைத்தையும் செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும், அவரைப் பல முன்னாள் வீரர்கள் புகழ்ந்தனர்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களையும் தனது பேட்டிங் திறன் மற்றும் ஆக்ரோஷமான செயல்பாட்டினால் கவர்ந்தவர் கோலி. அவ்வகையில் பாகிஸ்தான் வீரர்கள் சிலரும் கோலியின் ரசிகர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறுகையில், “விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். சில சமயங்களில் அது சர்ச்சையாக கூட மாறி இருக்கலாம். ஆனால் இந்திய அணிக்காக அவர் செய்ததை யாராலும் மறுக்க முடியாது. பல சமயங்களில் தனி ஒருவராக நின்று போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இவரைப் போன்ற வீரர்கள் மிகவும் அரிதாகவே கிரிக்கெட்டிற்கு கிடைப்பார்கள். அனைத்து மரியாதைக்கும் தகுதியான வீரர் கோலி. திருமணத்திற்கு பிறகு மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக களத்தில் செயல்பட்டதை நான் கவனித்திருக்கிறேன்” என்று சமீபத்தில் கூறினார்.
பாகிஸ்தானில் தொடக்க வீரராக களமிறங்கி சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டவர் அஹ்மத் ஷேஷாத். இவர் கிரிக்கெட்டில் நுழைந்த போது, பலரும் இவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டுப் பேசினர். விராட் கோலி ஓய்வு பெறுவதற்கு முன்பே இவர் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறினார். ஒரு கட்டத்தில் விராட் கோலி ஃபார்மை இழந்து ரன் குவிக்கத் தடுமாறிய போது, முன்னாள் வீரர்கள் பலரும் கோலியை குறை கூறினர். அப்போது, “கோலி ஓய்வு பெற்றால் தான் அவருடைய மதிப்பு உங்களுக்குப் புரியும்” என அஹ்மத் ஷேஷாத் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் அணி எப்போதும் வேகப்பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணி. அதற்கேற்ப முன்னாள் வீரர் முகமது அமீர் தனது வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார். இவர் விராட் கோலியைப் பற்றி கூறுகையில், “எக்காலத்திலும் விராட் கோலியைப் போன்ற ஒரு வீரரை நம்மால் பார்க்க இயலாது. அவரது சாதனைகள் மலைக்க வைக்கின்றன. கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றால் அது கோலி தான்” என்று புகழ்ந்தார்.
பள்ளி பருவத்திலேயே தனது ஆசிரியரிடம் அடுத்த சச்சின் டெண்டுல்கர் நான் தான் என்று சொன்னவர், அதை நிரூபித்தும் காட்டி விட்டார். இன்னும் சில ஆண்டுகள் கோலி விளையாடி இருந்தால் சச்சினின் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டிருக்கும்.