
இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட இருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் ஒருநாள் உலகககோப்பைத் தொடர் நடக்க இருக்கிறது. ஆனால் உலகக்கோப்பையில் இவர்கள் இருவரும் விளையாடுவார்களா என்பது சந்தேகம் தான் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கான ஒருநாள் போட்டிகள் மிகக் குறைவாகத் தான் உள்ளன. இந்நிலையில், உலக்கோப்பைக்கு இளம் வீரர்களை கொண்டு செல்ல பிசிசிஐ நினைத்து விட்டால், ரோஹித் மற்றும் கோலியின் உலக்கோப்பைக் கனவு நிறைவேறாமல் போகவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போது இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து ரன்களைக் குவிக்கும் பட்சத்தில் நிச்சயமாக ரோஹித் மற்றும் கோலி உலகக்கோப்பையில் விளையாடுவார்கள்.
பொதுவாக ஒரு வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலே, அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்து விட்டது என்றே அர்த்தம். அவ்வகையில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டை இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள் என்பது கேள்விக்குறி தான்.
ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இங்கிலாந்து தொடருக்கு சிறப்பாக தயாராவோம் என்றே கோலியும், ரோஹித்தும் தெரிவித்து இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து இருவரும் ஓய்வு பெற்றது, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. பிசிசிஐ சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் தான் இவர்களின் ஓய்வு முடிவுக்கு காரணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இவர்களுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டால், அதிலும் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரு ஜாம்பவான்களின் அடுத்தடுத்த ஓய்வு முடிவால் இவர்களின் கிரிக்கெட் பயணம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் ரோஹித் மற்றும் கோலி விளையாட மாட்டார்கள் எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆகச் சிறந்த சாதனைகள் பலவற்றை படைத்துள்ளனர். இருப்பினும் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் இந்திய அணியை பிசிசிஐ பலமுறை பரிசீலனை செய்யும். உலகக்கோப்பைக்கு இருவரும் தேர்வு செய்யப்பட்டால் சிறப்பாக செயல்படுவார்களா என்பதை பிசிசிஐ ஆலோசனை செய்யும்.
தேர்வுக்குழு சம்மதித்தால் மட்டுமே இருவரும் உலகக்கோப்பைக்குத் தயாராக இருப்பார்கள். நேர்மையாக சொல்வதென்றால் இருவரும் அடுத்து வரும் உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்பது தான் எனது கருத்து. இருப்பினும் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும். அடுத்த 2 ஆண்டுகளில் இருவரும் நல்ல ஃபார்மில் சதங்களை விளாசினால், உலகக்கோப்பையில் விளையாடுவதை யாராலும் தடுக்கவே முடியாது” என்று கவாஸ்கர் கூறினார்.
ரோஹித் மற்றும் கோலிக்கு இனி ஓய்வெடுக்க அதிக நேரம் கிடைக்கும் என்பதால், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு சிறப்பாக தயாராக முடியும். ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் ரோஹித் மற்றும் கோலியை களத்தில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது இந்தியா.