இனி போலி ஆஃபர்களுக்கு ஆப்பு: விரைவில் மாறப்போகும் ஆன்லைன் ஷாப்பிங் விதிகள்..!

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த விதிகள், ஆன்லைன் ஷாப்பிங்கில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், தள்ளுபடி, தேடல் முடிவுகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பாக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள நுகர்வோரைப் பாதுகாக்க புதிய இணையவழி ஷாப்பிங் புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

முக்கிய மாற்றங்கள்:

* திருத்தப்பட்ட விதிகளின்படி, ஆன்லைன் தளங்களில் ஒரு பொருளுக்கு தள்ளுபடி அறிவிக்கும்போது, தற்போதைய குறைக்கப்பட்ட விலையுடன் அதன் "முந்தைய விலையையும்" (Prior Price)கட்டாயம் குறிப்பிட வேண்டும். தள்ளுபடிக்கு முந்தைய 30 நாட்களில் அந்தப் பொருள் விற்கப்பட்ட மிகக் குறைந்த விலையே, முந்தைய விலையாகக் கணக்கிடப்படும். இதன் மூலம், தள்ளுபடிக்கு முன்பு விலையை செயற்கையாக உயர்த்தி, அதிக தள்ளுபடி வழங்குவது போல் நுகர்வோரை ஏமாற்றும் நடைமுறைகள் தடுக்கப்படும்.

* பயனர்களை தவறாக வழிநடத்தும் வகையில் தேடல் முடிவுகளை மாற்றியமைக்கவும் (search results) தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நுகர்வோர் ஆன்லைன் தளங்களில் ஒரு பொருளை தேடும் போது, அவர்கள் தேடலுக்குத் தொடர்பில்லாத பொருட்களை தேடுதல் வரிசையில் முன்னிலைப்படுத்தக் கூடாது என ஆன்லைன் தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக விலை கொண்ட பொருட்களையோ அல்லது தளத்தின் சொந்தத் தயாரிப்புகளையோ முன்னிலைப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sponsored Products அல்லது விளம்பரமாக முன்னிலைப்படுத்தப்படும் பொருட்கள் தெளிவாக ‘Sponsored’ என அடையாளப்படுத்தப்பட வேண்டும். அதாவது கட்டணம் செலுத்தி விளம்பரப்படுத்தப்படும் பொருட்கள், உண்மையான தேடல் முடிவுகளில் இருந்து எளிதாக வேறுபடுத்திக் காணும் வகையில் தெளிவான அடையாளத்துடன் காட்டப்பட வேண்டும் என புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் நுகர்வோருக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யப்படும் பொருட்கள் தேடுதல் முடிவுகளில் வரும்போது, அவை விளம்பரங்கள்தான் என்பதைத் தெளிவாகவும் எடுப்பாகவும் குறிப்பிட வேண்டும்.

* வாடிக்கையாளர்களை குழப்பி அல்லது அவர்களின் முடிவை மறைமுகமாக (ஏமாற்றி) மாற்றி பொருட்களை வாங்க வைக்கும் 'Dark Patterns' நடைமுறைகளுக்கு புதிய விதிகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

online shopper
online shopper

அதன்படி 'Dark Patterns' வடிவமைப்பு நுட்பங்களைத் தவிர்க்க 2023-இல் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை ஆன்லைன் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். மேலும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களது தளத்தை சுய தணிக்கை செய்து, Dark Patterns விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான இணக்கச் சான்றிதழையும் தளத்தில் காட்ட வேண்டும்.

* அனைத்து ஆன்லைன் விற்பனைத் தளங்களும் தேசிய நுகர்வோர் உதவி மையத்துடன் (National Consumer Helpline) கட்டாயம் இணைய வேண்டும். (2025-இல் என்.சி.எச் பெற்ற 17.7 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் 29% மின்-வர்த்தகம் சார்ந்தவை என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது).

இதையும் படியுங்கள்:
ஆன்லைன் ஷாப்பிங்: உஷார் மக்களே! - நீங்கள் அறிய வேண்டிய மோசடிகள்!
ஆன்லைன் ஷாப்பிங்

* பொருட்கள் மற்றும் விற்பனையாளர்கள் பற்றிய துல்லியமான விவரங்கள் இடம்பெற வேண்டும். அதாவது பொருட்களின் பயன்பாட்டுக் காலம் (Best-before/Use-before), திரும்பப் பெறும் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிமுறைகள் (Return/Refund terms), உத்தரவாதம் (Warranty), டெலிவரி மற்றும் கட்டண விவரங்களைத் தளங்கள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

* தேவையற்ற மற்றும் தொடர்பில்லாத கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது. அதாவது வாடிக்கையாளர் கோராத கூடுதல் சேவைகளுக்கான கட்டணங்களை (எ.கா: தேவையில்லாத கணக்கு பாதுகாப்பு கட்டணம்) பொருட்களின் விலையோடு சேர்க்கக் கூடாது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாட்டின் பெயர், இறக்குமதியாளர் விவரங்கள், பொருட்களின் Return, Refund, Warranty, Delivery உள்ளிட்ட தகவல்களையும் தெளிவாக வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களின் ஒப்புதல் (Express and Affirmative Consent) இன்றி, அவர்களின் சுய விவரங்கள் அல்லது தளத்தில் அவர்கள் தேடிய தகவல்களைப் பிற வணிகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

ஒட்டுமொத்தமாக, தேடுதல், விலை, தள்ளுபடி, விளம்பரம், விற்பனையாளர் விவரங்கள் மற்றும் புகார் அளித்தல் என ஆன்லைன் ஷாப்பிங்கின் ஒவ்வொரு கட்டத்திலும் நுகர்வோருக்கு முழு வெளிப்படைத்தன்மையை வழங்குவதே இந்தப் புதிய விதிகளின் முதன்மை நோக்கமாகும். மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த விதிகள், ஆன்லைன் ஷாப்பிங்கில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆன்லைன் ஷாப்பிங் போதையில் இருந்து மீள எளிய வழிகள்!
ஆன்லைன் ஷாப்பிங்

இந்த புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதால், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நுகர்வோர் இனி பொருட்களின் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை ஒப்பிட்டு பார்க்க கூடுதல் தகவல்களைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com